புனித அகுஸ்தீனின் அன்னையாகிய புனித மோனிக்கா புனித அகுஸ்தீனின் அன்னையாகிய புனித மோனிக்கா 

புனித மோனிக்கா, இறையொளியை வரவேற்றவர்

ஆப்ரிக்கா செல்வதற்குமுன், சிவித்தா வெக்கியா மற்றும் ஓஸ்தியா கடற்கரைப் பகுதிகளில் தங்கியவேளை, கி.பி.387ம் ஆண்டில் இறைபதம் அடைந்தார், புனித மோனிக்கா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித அகுஸ்தீனின் அன்னையாகிய புனித மோனிக்காவின் திருவிழாவாகிய, ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று, அந்த புனித அன்னையின் ஆன்மீகத்தை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள  டுவிட்டர் செய்தியில், “கடவுளின் ஒளியை வரவேற்பவர்களை, அது ஒளிரச் செய்கின்றது” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

புனித மோனிக்கா (கி.பி. 322-387)

ஹிப்போ நகரின் மோனிக்கா எனவும் அறியப்படும் புனித மோனிக்கா, வட ஆப்ரிக்க நாடாகிய தற்போதைய அல்ஜீரியாவில், தகாஸ்தே எனும் ஊரில் கி.பி.331ம் ஆண்டு பிறந்தவர். இவரின் கிறிஸ்தவ பெற்றோர், கிறிஸ்தவரல்லாத பத்ரீசியுஸ் என்பவருக்கு, இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். இவர், மாமியார் மற்றும் கணவரின் அறநெறியற்ற வாழ்வின் கொடுமைகளால் மிகவும் துன்புற்றார். இவருக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்தவரான அகுஸ்தீன், நோயாய் இருந்ததால், தனது கணவரிடம் கெஞ்சி அவருக்குத் திருமுழுக்கு அளித்தார். புனித மோனிக்காவின் புண்ணிய வாழ்வால், பத்ரீசியுஸ், இறப்பதற்கு ஓராண்டுக்குமுன் கிறிஸ்தவரானார். புனித மோனிக்காவின் மாமியும் திருநீராட்டுப் பெற்று இறந்தார்.

அக்காலத்தில் பெரிய மதமாக உருவெடுத்திருந்த மனிக்கேசிய தப்பறைக் கொள்கைப் பிரிவினரோடு இணைந்து நன்னெறியின்றி கட்டுப்பாடற்று வாழ்ந்துவந்த தனது மகன் அகுஸ்தீன் மனம் மாறுவதற்கு முப்பது ஆண்டுகள் கண்ணீர் சிந்தி இறைவனிடம் மன்றாடினார் புனித மோனிக்கா. இறுதியில், மிலான் ஆயர் புனித அம்புரோஸ் அவர்களின் மறையுரைகளால் அகுஸ்தீன் மனந்திரும்பி, திருநீராட்டுப் பெற்று, புதிய வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்தார். புனித மோனிக்காவின் நம்பிக்கை நிறைந்த நீண்ட கால இறைவேண்டலும் கேட்கப்பட்டது.

புனித மோனிக்கா அவர்கள் இறப்பதற்கு ஒரு சில நாள்களுக்கு முன் தன் மகன் அகுஸ்தீனிடம், 'மகனே இவ்வுலகில் எனக்கு இப்போது வேறு எதுவும் மகிழ்ச்சி தரமுடியாது. நான் இனிமேலும் ஏன் இவ்வுலகில் உயிருடன் இருக்க வேண்டுமென்றே தெரியவில்லை. இன்னும் சிறிது காலம் நான் வாழ விரும்பியது ஒரேயொரு வரத்திற்காகத்தான். நான் இறக்குமுன் உன்னைக் கத்தோலிக்க கிறிஸ்தவனாகப் பார்க்க விரும்பினேன். எனக்கு ஆண்டவர் இவ்வரத்தை அளவுக்கு அதிகமாகய்ப் பொழிந்துவிட்டார். இப்போது நீ அவருக்கே முழுவதும் சொந்தம் என்பதை உணருகிறேன். இவ்வுலக இன்பங்களை நீ விட்டொழித்ததையும் காண்கிறேன்" என்று கூறினார்.

புனித அகுஸ்தீனார், தனது தாய் புனித மோனிக்கா பற்றி, தனது Confessions என்ற நூலில் இவற்றையெல்லாம் எழுதியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2019, 15:06