புதன் பொது மறைக்கல்வியுரையின்போது  நோயுற்ற சிறுமி புதன் பொது மறைக்கல்வியுரையின்போது நோயுற்ற சிறுமி  

ஒப்புரவில் ஒத்திணங்கிச் செல்தல்

இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கச் செல்லுதல், நற்செய்திக்குச் செவிமடுத்தல் மற்றும், நற்செயல்கள் ஆற்றுவதில், புனித திருத்தந்தை 10ம் பயஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்ற அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“புதிதாகக் கட்டியெழுப்புவதைவிட, ஏற்கனவே கட்டப்பட்டிருப்பதை பழுதுபார்ப்பதற்கும், புதிதாக ஆரம்பிப்பதைவிட, ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும், சகித்துக்கொண்டே செல்வதைவிட ஒப்புரவாகுவதற்கும் அதிக சக்தி தேவைப்படுகின்றது, இந்த சக்தியையே கடவுள் நமக்கு அருளுகிறார்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், ஆகஸ்ட் 21, இப்புதனன்று பதிவாகி இருந்தன.

மேலும், புனித திருத்தந்தை 10ம் பயஸ் (பத்திநாதர்) அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நற்செயல்கள் ஆற்றவும், நற்செய்திக்குச் செவிமடுக்கவும், இப்புதனன்று, அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 21, இப்புதனன்று, புனித திருத்தந்தை 10ம் பயஸ் அவர்களின் திருவிழா சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கச் செல்லுதல், நற்செய்திக்குச் செவிமடுத்தல் மற்றும், நல்ல செயல்கள் ஆற்றுவதில், இப்புனித திருத்தந்தையின் முன்மாதிரிகையான வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு, திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

புனித திருத்தந்தை 10ம் பயஸ்

ஜூசப்பே மெல்கியோர் சார்த்தோ (Giuseppe Melchiorre Sarto) என்ற இயற்பெயரைக்கொண்ட புனித திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், 1835ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, இத்தாலியின் ரியெசெவில் பிறந்தார். 1903ம் ஆண்டிலிருந்து, 1914ம் ஆண்டு வரை, திருஅவையின் தலைமைப்பணியாற்றிய இவர், 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி இறைபதம் அடைந்தார். 1954ம் ஆண்டு மே 29ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால், புனிதராக இவர் அறிவிக்கப்பட்டார். இவரின் திருவிழா ஆகஸ்ட் 21ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

திருநற்கருணை திருத்தந்தை எனப் போற்றப்படும், புனித திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், அருள்வாழ்வு நிலையிலுள்ள அனைவரும் திருநற்கருணை வாங்கலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்தவர்.

திருவழிபாடு, சிறப்பாக, திருப்பலி, அருள்பணியாளர்களின் கட்டளை செபம், திருஅவை சட்டங்களைப் புதுப்பித்தல், கத்தோலிக்கச் சமுதாயத் தொண்டு போன்றவற்றில், அதிகக் கவனம் செலுத்திய இத்திருத்தந்தை, ஏழையாகப் பிறந்தேன், ஏழையாக வளர்ந்தேன், ஏழையாகவே இறப்பேன் என்று அடிக்கடி கூறுவாராம்.

நோயாளிச் சிறுமி

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின்போது மேடையில் நடந்துகொண்டிருந்த சிறுமி பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, நோயுற்ற இச்சிறுமிக்காகச் செபியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2019, 15:36