தேடுதல்

Vatican News
புயலை அடக்கும் இயேசு புயலை அடக்கும் இயேசு 

இறைவன், நம் வாழ்வின் சுமைகளில் தோள்கொடுக்கிறார்

நம் வாழ்வின் சுமைகளைத் தாங்கிக் கொள்வதற்கு, தூய ஆவியார், நமக்குத் திடமளித்து, சக்தியளிக்கிறார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வாழ்வின் சுமைகளை நாம் தனியே சுமக்கவிடாமல், இறைவனும், அதில் தோள் கொடுக்கிறார் என்ற ஆறுதல்தரும் சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

ஒருபுறம் கனமழை, பெருவெள்ளம், மறுபுறம் வறட்சி, தண்ணீர்ப் பஞ்சம், இன்னொரு புறம், போர்கள், துப்பாக்கிச்சூடுகள், புலம்பெயர்வுகள், குடும்பப்பாரங்கள், அரசியல் அழுத்தங்கள் என, பல்வேறு வழிகளில், உலகில் மக்கள் ஒவ்வொரு நாளும் துன்புற்றுவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி, புண்பட்ட மனதிற்கு நல்மருந்தாக அமைந்துள்ளது. 

“நம் வாழ்வின் சுமைகள், நம் தோள்களில் தனியே விடப்படுவதில்லை, தூய ஆவியார், நம் சுமைகளைத் தாங்கிக் கொள்வதற்கு, நமக்கு ஊக்கமளித்து, சக்தியளிக்கிறார்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், ஆகஸ்ட் 17, இச்சனிக்கிழமையன்று, இடம்பெற்றிருந்தன.

@pontifex என்ற வலைத்தள முகவரியில், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், ஆகஸ்ட் 16, இவ்வெள்ளி முடிய, 2,081 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தின் எல் பாசோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்குப்பின், அந்நாட்டில் ஆயுத விற்பனை இருமடங்காகியுள்ளது என்றும், துப்பாக்கிச்சூடு பயிற்சிகள் 700 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும், panampost.com வலைத்தள செய்தி கூறுகிறது.

17 August 2019, 14:53