தேடுதல்

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு 

மரியாவின் 'ஆம்' என்ற ஒப்புதல் - டுவிட்டர் செய்தி

"நாசரேத்தில் மரியா கூறிய 'ஆம்' என்ற சொல்லின் வழியே, அவரது விண்ணகப் பயணம் துவங்கியது. இறைவனுக்கு வழங்கப்படும் 'ஆம்' என்ற ஒவ்வொரு ஒப்புதலும், விண்ணகம் நோக்கி எடுத்துவைக்கப்படும் ஓர் அடி."

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மரியா வழங்கிய 'ஆம்' என்ற ஒப்புதல், மையக்கருத்தாக அமைந்தது.

"நாசரேத்தில் மரியா கூறிய 'ஆம்' என்ற சொல்லின் வழியே, அவரது விண்ணகப் பயணம் துவங்கியது. இறைவனுக்கு வழங்கப்படும் 'ஆம்' என்ற ஒவ்வொரு ஒப்புதலும், விண்ணகத்தையும், முடிவில்லா வாழ்வையும் நோக்கி எடுத்துவைக்கப்படும் ஓர் அடி. ஏனெனில் இறைவன் நம் அனைவரையும் தன்னோடு, தன் வீட்டில் இருப்பதையே விரும்புகிறார்" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

அன்னை மரியா புதைக்கப்பட்ட கல்லறையில் அவரது உடல் இல்லை என்பதை திருத்தூதர்கள் துவக்கத்திலிருந்தே நம்பி வந்தனர் என்பதும், மரியாவின் விண்ணேற்பு விழாவை, கீழை திருஅவை 'இறைவனின் அன்னை உறங்கிய திருநாள்' என்று துவக்கத்திலிருந்தே கொண்டாடி வந்தது என்பதும், குறிப்பிடத்தக்கன.

மரியா உறங்கிய திருநாளை, 8ம் நூற்றாண்டிலிருந்து, கத்தோலிக்கத் திருஅவை, விண்ணேற்பு விழாவென்று சிறப்பிக்கத் துவங்கியது என்றாலும், இதை ஒரு மறையுண்மையாக, 1950ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தவறா வரத்தைப் பயன்படுத்தி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், “Munificentissimus deus” என்ற அறிக்கை வழியே, இறைவனின் மாசற்ற தாயான மரியா உடலோடும், ஆன்மாவோடும் விண்ணக மகிமைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்பதை மாற்ற இயலாத ஓர் உண்மையாக வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2019, 14:04