புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 280819 புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 280819 

அரைகுறையான ஆர்வத்துடன் வாழும் கிறிஸ்தவர்கள்

"அரைகுறை முயற்சிகளுடன் வாழ்ந்து, நம் அன்பின் ஆர்வத்தைத் தணித்து, மிதமான கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையிலிருந்து நம்மைக் காத்தருள, இறைவனிடம் அருள் வேண்டுகிறோம்" – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆயரும் மறைவல்லுநருமான புனித அகுஸ்தின் திருநாள், இப்புதனன்று கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கிறிஸ்தவர்களாகிய நாம் அரைகுறையான ஆர்வத்துடன் வாழ்வதிலிருந்து நம்மை இறைவன் காத்தருள வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

"அரைகுறை முயற்சிகளுடன் வாழ்ந்து, நம் அன்பின் ஆர்வத்தைத் தணித்து, மிதமான கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையிலிருந்து நம்மைக் காத்தருள, இறைவனிடம் அருள் வேண்டுகிறோம்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், 2018ம் ஆண்டு, செப்டம்பர் 22ம் தேதி திருப்பீடத்திற்கும், சீன அரசுக்கும் இடையே உருவான ஓர் ஒப்பந்தத்திற்குப் பின், அந்நாட்டில், திருத்தந்தையின் ஒப்புதலோடு, Antonio Yao Shun என்ற அருள்பணியாளர், ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

54 வயதான அருள்பணி Yao Shun அவர்கள், ஆகஸ்ட் 26, இத்திங்களன்று, மங்கோலியாவின் Jining என்ற மறைமாவட்டத்தின் ஆயராக, அருள்பொழிவு பெற்றவேளையில், அவர், திருத்தந்தையின் ஒப்புதலோடு அருள்பொழிவு பெறுகிறார் என்ற அறிக்கையும் வாசிக்கப்பட்டதென்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள் அறிவித்துள்ளார்.

திருவழிபாட்டின் பேராசிரியாராகப் பணியாற்றிய அருள்பணியாளர் Yao Shun அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் விருதுவாக்கான, "தந்தை இரக்கமுள்ளவராக இருப்பதைப்போல்" ("Misericordes sicut Pater") என்ற சொற்களை, தன் ஆயர் பணியின் விருதுவாக்காகத் தெரிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2019, 14:58