இயேசு தோற்ற மாறிய இடமிருக்கும் தபோர் மலை இயேசு தோற்ற மாறிய இடமிருக்கும் தபோர் மலை 

ஆண்டவரின் தோற்றமாற்றம் விண்ணக காட்சி

தபோர் மலையில், இயேசு தோற்றம் மாறிய இடத்தில், 4ம் நூற்றாண்டில் முதல் ஆலயம் எழுப்பப்பட்டு, ஆகஸ்ட் 6ம் தேதியன்று அர்ச்சிக்கப்பட்டது. இயேசுவின் தோற்றமாற்ற விழா, ஆகஸ்ட் 6ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

“இயேசு, தமது தோற்றமாற்றத்தில் உயிர்ப்பின் மகிமையை நமக்குக் காட்டுகிறார், அது, இப்பூமியில், விண்ணகத்தின் கணநேர காட்சியாகும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 06, இச்செவ்வாய் திருவழிபாட்டில், ‘ஆண்டவருடைய தோற்றமாற்றம்’ விழா கொண்டாடப்பட்டவேளை, திருத்தந்தையும், இந்நாளில், தன் டுவிட்டர் செய்தியில், அந்நிகழ்வு பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார்.

இயேசுவின் தோற்றமாற்றம் விழா

மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, சில கிறிஸ்தவர்கள், இயேசு தோற்ற மாறிய இடமாக, தபோர் மலையை கருதி வந்தனர். அந்த இடத்தில் நான்காம் நூற்றாண்டில் முதல் ஆலயம் எழுப்பப்பட்டு, ஆகஸ்ட் 6ம் தேதியன்று அர்ச்சிக்கப்பட்டது. அந்த நாளிலிருந்து, கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், இயேசுவின் தோற்றமாற்ற விழாவை, ஆகஸ்ட் 6ம் தேதி சிறப்பித்து வருகின்றன. ஆயினும், மேற்குத் திருஅவைகளின் சில பகுதிகள், ஏறத்தாழ எட்டாம் நூற்றாண்டில், இவ்விழாவைச் சிறப்பிக்கத் தொடங்கின.

1456ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சிலுவைப்போர் வீரர்கள், துருக்கியரை பெல்கிரேடில் தோற்கடித்தனர். அந்தச் செய்தி ஆகஸ்ட் 6ம் தேதிதான் உரோம் நகருக்குக் கிடைத்தது. அதற்குப் பின்னர், திருத்தந்தை 3ம் கலிஸ்துஸ் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டில், அவ்விழாவை, உரோம் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார்.

புனித திருத்தந்தை 6ம் பவுல்

மேலும், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் நினைவு நாளும், இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. ஜொவான்னி பத்திஸ்தா மொந்தீனி என்ற திருமுழுக்குப் பெயர் கொண்ட இவர், 1897ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, இத்தாலியின் பிரேஷா நகருக்கு அருகிலுள்ள கொன்செசியோ என்ற ஊரில் பிறந்தார். இவர், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இறைபதம் அடைந்தார். 2014ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அருளாளராகவும், 2018ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, புனிதராகவும் அறிவிக்கப்பட்டார் இவர். புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் திருவிழா, செப்டம்பர் 26ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2019, 14:20