சிரியா மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள செபமாலைகளை திருத்தந்தை ஆசீர்வதித்தல் சிரியா மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள செபமாலைகளை திருத்தந்தை ஆசீர்வதித்தல் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு ஆசிய மக்களுக்காக...

சிரியாவில் வாழும் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள 6000த்திற்கும் அதிகமான செபமாலைகளை தான் ஆசீர்வதிக்கவிருப்பதாகவும், தன்னுடன் மக்கள் இணைந்து செபிக்கும்படியும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தெற்கு ஆசிய நாடுகளில், மழையாலும், வெள்ளத்தாலும், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, என் அருகாமையைத் தெரிவிக்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

அதிகமான பருவ மழை, மற்றும், வெள்ளத்தால், தம் உறவுகளையும், வீடுகளையும் இழந்தோருக்கு, இறைவன் உறுதுணையாக, ஆறுதலாக இருக்க செபிப்போம் என்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளிடம் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

போலந்து பக்தர்களுக்கு வாழ்த்து

மேலும், போலந்து நாட்டின் Czestochowa திருத்தலத்தில், விண்ணேற்புத் திருநாளன்று, கறுப்பு அன்னையைக் கொண்டாடக் கூடியிருக்கும் பக்தர்களுக்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை.

சிறப்பாக, இவ்வாண்டு, போலந்து நாட்டுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே, தடைப்பட்டிருந்த உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவு, இவ்வியாழனன்று கொண்டாடப்படுவதை, திருத்தந்தை தன் வாழ்த்துக்களில் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

சிரியா நாட்டு மக்களுக்கு செபமாலை

அத்துடன், 'Aid to the Church in Need' அமைப்பைச் சார்ந்தவர்கள் உருவாக்கியுள்ள 6000த்திற்கும் அதிகமான செபமாலைகளை தான் ஆசீர்வதிக்கவிருப்பதாகவும், தன்னுடன் மக்கள் இணைந்து செபிக்கும்படியும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

சிரியா நாட்டில் வாழும் மக்களுக்கு இந்த செபமாலைகள் வழங்கப்படுவதன் வழியே அவர்களுக்கு தன் அருகாமையை வெளிப்படுத்துவதாக தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய கிழக்குப் பகுதி மற்றும் உலகின் பல நாடுகளில் அமைதி இழந்து வாடும் மக்களுக்காக செபமாலையைத் தொடர்ந்து செபிப்போம் என்று கூறி, கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2019, 12:20