செப்டம்பர் மாதச் செபக் கருத்து  காணொளி செப்டம்பர் மாதச் செபக் கருத்து காணொளி 

கடல்களும் பெருங்கடல்களும் பாதுகாக்கப்படும்படியாக...

செப்டம்பர் 1, இஞ்ஞாயிறு முதல், வருகிற அக்டோபர் 4, அசிசி நகர் புனித பிரான்சிஸ் விழா வரை, ‘படைப்பின் காலம்’ என்று, திருத்தந்தையோடு இணைந்து அனைவரும் கொண்டாடுவதற்கு, கத்தோலிக்க அமைப்புக்களும், பல்வேறு கிறிஸ்தவ சபைகளும் அழைப்பு விடுத்துள்ளன

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

பெரும்பாலான கடல்களும் பெருங்கடல்களும், பல்வேறு காரணங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும்வேளை, அவை பாதுகாக்கப்படும்படியாக, இந்த செப்டம்பர் மாதத்தில் கடவுளிடம் மன்றடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செப்டம்பர் மாதத்திற்குரிய தனது செபக் கருத்து பற்றி காணொளியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பூமிக்கோளத்தின் நீர் விநியோகத்தைப் பெருமளவு கொண்டிருக்கும் பகுதிகள் மற்றும், நீரில் வாழ்கின்ற பெருமளவான பல்வேறு பல்லுயிர்கள் பற்றி நாம் நினைத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடல்கள் மற்றும், பெருங்கடல்களின் தற்போதைய நிலை பற்றி கவலைகொண்டுள்ள அதேநேரம், அனைத்து அரசியல்வாதிகளும், அறிவியலாளர்களும், பொருளியலாளர்களும் அவற்றைப் பாதுகாக்க, ஒன்றிணைந்து நடவடிக்கைகள் எடுக்குமாறு கத்தோலிக்கர் எல்லாரும் செபிக்க வேண்டுமென்று, திருத்தந்தை அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும், உலகளாவிய ஆண்டு நிகழ்வான, ‘படைப்பின் காலம்’, செப்டம்பர் 1, இஞ்ஞாயிறன்று துவங்கும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், படைப்பு, குறிப்பாக, கடல்களும் பெருங்கடல்களும் பாதுகாக்கப்படும்படியாக, சிறப்பாகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நெகிழிப் பொருள்கள்

தற்போது ஒவ்வோர் ஆண்டும் பெருங்கடலில், ஒரு கோடியே 30 இலட்சம் டன் நெகிழிப் பொருள்கள் குவிகின்றன. இவை, பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவதோடு, கடல்களில் வாழும், ஒரு இலட்சம் உயிரினங்களின் இறப்புக்கும் காரணமாகின்றன.

பெருங்கடல்களில் குவியும் பல நெகிழிப் பொருள்கள், பல ஆண்டுகளாக அல்லது நூற்றாண்டுகளாக அழியாமல் இருப்பதோடு, அவை மெல்ல மெல்ல நுண்நெகிழிப்பொருள்களாக மாறி, அவற்றை மீன்கள் மற்றும், ஏனைய கடல்வாழ் உயிரினங்கள் சாப்பிடுகின்றன என்று, ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2019, 15:43