புதன் பொது மறைக்கல்வி உரைக்குப்பின் கடற்படை வீரர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வி உரைக்குப்பின் கடற்படை வீரர்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு – திருத்தந்தை செபம்

வெறுப்பின் கொடுமையான விளைவுகளாக உருவான அழிவு, துன்பம், சாவு ஆகியவை இவ்வுலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்று நாம் செபிப்போம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 28, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கியபின்னர், இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளை நினைவுகூர்ந்து, அமைதிக்காக செபிக்குமாறு மக்களிடம் விண்ணப்பித்தார்.

வெறுப்பின் கொடுமையான விளைவுகளாக உருவான அழிவு, துன்பம், சாவு ஆகியவை இவ்வுலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்று நாம் செபிப்போம் என்று, திருத்தந்தை, தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறினார்.

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த போலந்து நாட்டு மக்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில், 1939ம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதி, ஹிட்லரின் நாத்சி படைகள் அத்துமீறி நுழைந்ததை நினைவுகூர்ந்தார்.

இந்த அத்துமீறலைத் தொடர்ந்து, பிரித்தானியாவும் பிரான்சும் போரை அறிவிக்கவே, இரண்டாம் உலகப்போர் துவங்கியது என்பதும், அந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பின் 80ம் ஆண்டு நினைவு, செப்டம்பர் 1, வருகிற ஞாயிறன்று கடைபிடிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

தற்போது பிரான்ஸ் நாட்டில் கூடியுள்ள G 7 தலைவர்கள், இந்த 80ம் ஆண்டு நினைவையொட்டி, போலந்து நாட்டின் வார்சா நகரில், பியுசுட்ஸ்கி (Piłsudski) சதுக்கத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்வில் பங்கேற்பர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2019, 15:01