புதன் பொது மறைக்கல்வியுரை 070819 புதன் பொது மறைக்கல்வியுரை 070819  

விடுமுறைகள், உறவுகளுக்கு உயிரூட்டமளிக்கும் காலம்

விடுமுறை நாள்களில், அன்றாட இறைவேண்டல்களைப் புறக்கணியாதீர்கள், ஞாயிறு திருப்பலியையும், மற்றவரோடு நேரம் செலவிடுவதையும் மறவாதீர்கள் - திருத்தந்தை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

விடுமுறைகள், ஓய்வெடுப்பதற்கு மட்டுமன்றி, உறவுகளை உயிர்பெறச் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் காலமாகவும் அமைந்துள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், போலந்து திருப்பயணிகளிடம் கூறினார்.

விடுமுறைகள், கடவுளோடும், மனிதரோடும் இருக்கின்ற அன்புப் பிணைப்பைப் உயிரூட்டம்பெறச் செய்வதற்கு வாய்ப்பாகவும் உள்ளன என்றுரைத்த திருத்தந்தை, அன்றாட இறைவேண்டல்களைப் புறக்கணியாதீர்கள், ஞாயிறு திருப்பலியையும், மற்றவரோடு நேரம் செலவிடுவதையும் மறவாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.  

படைப்பின் அழகு, எல்லாம்வல்லவரின் மகிமை, படைத்தவரின் ஞானம் மற்றும் அவரின் பேரன்பு, ஆகியவற்றைத் தியானியுங்கள் என்றும் போலந்து திருப்பயணிகளிடம் கூறியத் திருத்தந்தை, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட, கடலில் காப்பாற்றப்பட்ட புலம்பெயர்ந்த சிறாரையும் பாசத்தோடு வாழ்த்தினார்.

ஏறத்தாழ 50 பேர், Gregoretti கப்பலால் காப்பாற்றப்பட்டு, அக்சீலியம் அமைப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

போலந்தில் 308வது நடைப்பயணம்

மேலும், போலந்து நாட்டில், ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று ஏறத்தாழ ஐந்தாயிரம் திருப்பயணிகள், 308வது வார்சா நடை திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

தலைநகர் வார்சாவிலிருந்து 248 கிலோ மீட்டர் தூர நடைபயணத்தைத் தொடங்கியுள்ள இப்பயணிகள், ஒன்பது நாள்கள் நடந்து, ஆகஸ்ட் 14ம் தேதி, செஸ்டகோவா, யஸ்ன கோரா அன்னை மரியா திருத்தலத்தைச் சென்றடைவர்.  

இந்த நடை திருப்பயணம், 1717ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தடையின்றி நடைபெற்று வருகிறது. 1792ம் ஆண்டில் இவ்வாறு சென்ற அனைத்து திருப்பயணிகளும் இரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டனர். 1920ம் ஆண்டில் சோவியத் படைகள், வார்சாவை நெருங்கி வந்ததால், அப்போது திருப்பயணம் மேற்கொண்ட பயணிகள் பிரிந்து சென்று, தனித்தனியாக யஸ்ன கோவா திருத்தலம் சென்று சேர்ந்தனர் என்று சொல்லப்படுகின்றது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2019, 16:04