தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 070819 புதன் மறைக்கல்வியுரை 070819 

புதன் மறைக்கல்வியுரை : சொல்லாலும் செயலாலும் நற்செய்தி

இயேசுவின் சீடர்கள், மீட்பின் நற்செய்தியை தங்கள் வார்த்தைகளால் மட்டுமன்றி, மெய்யான செயல்களாலும் பறைசாற்றினார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கடந்த ஒரு மாதமாக, அதாவது, ஜூலை முழுவதும் கோடை வெயில், மற்றும், கோடை விடுமுறை காரணமாக இடம்பெறாமல் இருந்த திருத்தந்தை அவர்களின் புதன் மறைக்கல்வியுரைகள், இப்புதனன்று மீண்டும் துவங்கின. கடுமையான வெயிலின் காரணமாக, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் இடம்பெற்ற இந்த மறைக்கல்வி உரையில், திருத்தூதர் பணிகள் குறித்த தன் மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியை இன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், திருத்தூதர் பணி நூல், பிரிவு மூன்றிலிருந்து புனித பேதுரு நிகழ்த்திய புதுமை குறித்து பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவர், கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறினார் (தி.ப. 3,3-6), என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் மறைக்கல்வி உரை தொடர்ந்தது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, இயேசுவின் சீடர்கள் எவ்வாறு, மீட்பின் நற்செய்தியை தங்கள் வார்த்தைகளால் மட்டுமன்றி, மெய்யான செயல்களாலும் பறைசாற்றினார்கள் என்பதைக் குறித்து காண்போம். திருத்தூதர் பணிகள் நூலில் நாம் காணும் முதல் புதுமை இதற்குச் சான்று பகர்கிறது. பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றவேளையில், கோவிலின் வாயிலில், பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சந்திக்கின்றனர். மக்களால் கைவிடப்பட்ட, மற்றும், ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக நோக்கப்படும் இந்த இரந்துண்ணும் ஏழை, மக்கள் ஏதாவது காசு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கோவில் வாசலில் காத்திருக்கிறார். இவர் மீது தங்கள் பார்வையை திருப்பிய இயேசுவின் சீடர்கள் பேதுருவும் யோவானும், பொருட்களை வித்தியாசமான கோணத்தில் நோக்குவதற்கு அவரை நோக்கி அழைப்பு விடுக்கின்றனர். அவருக்கு பொன்னையும் வெள்ளியையும் சீடர்கள் வழங்கவில்லை, மாறாக, கொடைகளுக்கெல்லாம் மிக உன்னதக் கொடையாகிய, இயேசு கிறிஸ்துவின் வழியாக கிட்டும் மீட்பை கொடையாக வழங்குகின்றனர். அவரோடு புதிய உறவை சீடர்கள் உருவாக்கிக் கொள்கின்றனர். இதைத்தான் இறைவனும் விரும்புகின்றார். மக்களிடையே காணப்படும் அன்புடன்கூடிய உறவில் தன்னை வெளிப்படுத்த ஆவல் கொள்கிறார் இறைவன். ஊனமுற்றிருந்த ஒருவரைப் பிடித்துத் தூக்கிவிட்டு நடக்க வைத்ததில், உயிர்ப்பின் சாயலைக் காண்கிறார் புனித ஜான் கிறிசோஸ்தம். உதவித் தேவைப்படுவோரைத் தேடிச் சென்று, அவர்களைத் தூக்கிவிடவேண்டும் என்ற அழைப்பைப் பெற்றுள்ள திருஅவையின் அடையாளமாகவும் இப்புதுமை உள்ளது. புனிதர்கள் பேதுரு மற்றும் யோவானைப்போல், மற்றவர்களுக்கு உதவிபுரிய முன்வரும் நாம், உயிர்த்த இயேவுடன் நாம் கொண்டிருக்க வேண்டிய உறவின் தேவை குறித்தும் உணர்ந்தவர்களாகச் செயல்படுவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளை மறுநாள், வெள்ளியன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் புனித எடித் ஸ்டெயின் திருவிழா பற்றி குறிப்பிட்டார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2019, 11:00