திருத்தந்தையின் மூவேளை செப உரைக்குச் செவிமடுக்கும் விசுவாசிகள்  திருத்தந்தையின் மூவேளை செப உரைக்குச் செவிமடுக்கும் விசுவாசிகள்  

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு செபம்

அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், தாக்குதல்கள் குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தையும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு செபங்களையும் தெரிவித்துள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுள்ள இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டெக்சஸ், கலிஃபோர்னியா மற்றும், Ohio பகுதிகளில் நடத்தப்பட்டுள்ள, இரத்தம் சிந்திய தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, அவர்களுக்காக, அன்னைமரியிடம் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்களும் தங்களின் வன்மையான கண்டனத்தையும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு செபங்களையும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், 24 மணி நேரத்திற்குள், இஞ்ஞாயிறன்று, Ohio மாநிலத்தின் Dayton பகுதியில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 16 பேர் காயமடைந்தனர்.

மேலும், ஆகஸ்ட் 03, சனிக்கிழமையன்று, டெக்சஸ் மாநிலத்தின், எல் பாசோவில் மக்கள் அதிகமாக இருந்த வணிக வளாகத்தில், ஓர் இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில், 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதல்கள், அந்நாட்டில், 2019ம் ஆண்டில் நடத்தப்பட்டுள்ள 22வது வன்முறையாகும்.

புனித மரிய வியான்னி

ஆர்ஸ் நகர் புனித ஜான் மரிய வியான்னி அவர்கள் இறைவனடி சேர்ந்ததன் 160ம் ஆண்டு நிறைவையும், மூவேளை செப உரைக்குப் பின்னர் நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்புனிதர், அனைத்து அருள்பணியாளர்களுக்கும், நன்மைத்தனம் மற்றும் பிறரன்பின் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் என்றார், திருத்தந்தை.

இக்கால சமுதாயத்தில், திருப்பணி குருத்துவத்தின் அழகும், முக்கியத்துவமும் மீண்டும் கண்டுணரப்பட, தம் மக்களுக்காக முழுவதும் தன்னை அர்ப்பணித்திருந்த, இந்த தாழ்மையான பங்குத்தந்தையின் சாட்சிய வாழ்வு உதவுவதாக எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2019, 15:24