திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் Achille Silvestrini திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் Achille Silvestrini  

கர்தினால் சில்வெஸ்திரினி மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

1991ம் ஆண்டு மே 24ம் தேதி, திருப்பீடத்தின் கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட, கர்தினால் சில்வெஸ்திரினி அவர்கள், 2000மாம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பணி ஓய்வுபெற்றார்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

கர்தினால் அக்கிலே சில்வெஸ்திரினி அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி, அவரின் ஆன்மா இறைவனில் நிரந்தரமாக இளைப்பாறுவதற்காகச் செபிப்பதாக உறுதிகூறியுள்ள அதேநேரம், கர்தினால் ஆற்றிய சிறப்பான பணிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் முன்னாள் தலைவரான, கர்தினால் சில்வெஸ்திரினி அவர்கள், தனது 95வது வயதில், ஆகஸ்ட் 29, இவ்வியாழனன்று இறைவனடி சேர்ந்தார். அவரின் இறுதி வழியனுப்பும் திருவழிபாடு, ஆகஸ்ட் 30, இவ்வெள்ளி மாலையில், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நடைபெற்றது.

கர்தினால்கள் அவையின் துணைத் தலைவர், கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய இறுதிச்சடங்கு திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் சில்வெஸ்திரினி அவர்களின் உடலை மந்திரித்து, இறுதி மரியாதை செய்தார்.

கர்தினால் சில்வெஸ்திரினி அவர்களின் மறைவோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 215 ஆகவும், 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை  118 ஆகவும் மாறியது.

கர்தினால் சில்வெஸ்திரினி

இத்தாலியின் Brisighella என்ற ஊரில் 1923ம் ஆண்டு பிறந்த கர்தினால் சில்வெஸ்திரினி அவர்கள், தனது 30வது வயதில், திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் சேர்ந்தார். திருப்பீட செயலகத்தில், திருஅவையின் சிறப்பு விவகாரத்துறையில் பணியாற்றிய இவர், வியட்நாம், சீனா, இந்தோனேசியா, மற்றும், தென்கிழக்கு ஆசியாவில் இடம்பெற்ற பிரச்சனைகளைக் களைவதில் முனைப்புடன் செயல்பட்டவர்.

அணுஆயுதங்கள் பரவல் தடை ஒப்பந்தத்தில் திருப்பீடம் இணைவது தொடர்பான ஏட்டை சமர்ப்பிப்பதற்கு, 1971ம் ஆண்டில், கர்தினால் அகுஸ்தீனோ கசரோலி அவர்களுடன் மாஸ்கோ சென்றவர், கர்தினால் சில்வெஸ்திரினி. 1988ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், வத்திக்கான் மனசாட்சி நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2019, 15:32