தேடுதல்

மீட்பு பணியில் இந்திய இராணுவம் மீட்பு பணியில் இந்திய இராணுவம் 

இந்திய பெருமழை உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம்

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மற்றும், குஜராத்தில் பெய்துவரும் பெருமழையால் உயிரிழந்தவர்கள், மற்றும், தங்கள் உறைவிடங்களை இழந்தவர்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் பெருமழையால் உயிரிழந்துள்ள மக்கள் குறித்த திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தி அந்நாட்டு தலத்திருஅவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தி, அண்மைய நாட்களில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மற்றும், குஜராத்தில் பெய்துவரும் பெருமழையால் உயிரிழந்தவர்கள், மற்றும், தங்கள் உறைவிடங்களை இழந்தவர்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்டோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் அதேவேளை, துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருப்போருக்காக தான் செபிப்பதாகவும், இறையாசீரை இறைஞ்சுவதாகவும் திருத்தந்தையின் சார்பில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி உரைக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள 4 மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 1 இலட்சத்து 65,000க்கும் அதிகமானோர் உறைவிடங்களிலிருந்து வெளியேறி, நிவாரண மையங்களில் குடியேறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2019, 15:19