புதன் மறைக்கல்வியுரையின்போது - 210819 புதன் மறைக்கல்வியுரையின்போது - 210819 

மறைக்கல்வி : கிறிஸ்தவர்களிடையே ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமையாதது

இயேசுவோடு நாம் கொள்ளும் உறுதியான உறவின் வழியாக, அவரின் திருஉடலாம் திருஅவையின் அங்கத்தினர்களோடும் அன்பின் பிணைப்பை உருவாக்குகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் முதல் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித் தொடரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, திருஅவையின் பிறப்பில் தூய ஆவியார், அதன் வளர்ச்சியில் இயேசுவின் சீடர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து இன்று எடுத்துரைத்தார்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, எவ்வாறு கிறிஸ்தவ சமுதாயம் தூய ஆவியாரின் கொடைகளால் பிறந்தது என்பதையும், இயேசுவின் சீடர்கள் தங்களுக்கிடையே வாழ்வை பகிர்ந்துகொண்டதன் வழியாக எவ்வாறு திருஅவையை வளர்த்தனர் என்பதையும் நோக்குவோம். இறைக்குடும்பத்தைக் கட்டியெழுப்புவதில், கிறிஸ்தவர்களுக்கிடையே ஒருமைப்பாட்டுணர்வு என்பது இன்றியமையாதது. இந்த உடன்பிறந்த உணர்வும், இயேசுவின் உடல் மற்றும் இரத்தமெனும் அருளடையாளத்தைப் பெறுவதன் வழியாக ஊட்டம் பெறுகிறது. இயேசுவோடு நாம் கொள்ளும் உறுதியான உறவின் வழியாக அவரின் திருஉடலாம் திருஅவையின் அங்கத்தினர்களோடும் அன்பின் பிணைப்பை உருவாக்குகிறோம் என்பதை இங்கு காண்கிறோம். துவக்ககால கிறிஸ்தவர்களிடையே திருநற்கருணையில் பங்கெடுப்பது என்பது, தங்கள் பொருட்களை பொதுவில் வைத்து, ஏழை சகோதர சகோதரிகளுக்கு உதவும் அக்கறையை வெளிப்படுத்துவதை நோக்கி அவர்களை இட்டுச்சென்றது. சகோதரத்துவ பிறரன்பை உண்மையாக வாழ்வதன் வழியாக, ஒன்றிப்பின் தீச்சுடரைத் தாங்கியவர்களாக, கிறிஸ்துவின் சீடர்கள் என்ற தனித்தன்மையை நாம் வெளிப்படுத்த முடியும். இத்தகைய அழைப்பிற்கு உண்மையுள்ளவர்களாக நாம் செயல்பட முயலும்வேளையில், இறைவன், கனிவு எனும் தூய ஆவியாரை நம்மீது பொழிந்து, நம் ஒருமைப்பாட்டுணர்வை, குறிப்பாக, உதவித் தேவைப்படுவோருடன் நம் ஒருமைப்பாட்டுணர்வைப் பலப்படுத்துவாராக.

இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2019, 16:03