ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் 

உண்மையான செல்வம் விண்ணகத்தில் உள்ளது - திருத்தந்தை

செல்வங்கள், உண்மையான செல்வக்குவியலிலிருந்து நம்மை திசை திருப்பும் மற்றும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

செல்வங்கள், உண்மையான செல்வக்குவியலிலிருந்து நம்மை திசை திருப்பும் மற்றும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் என்று, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எச்சரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 04, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அறிவற்ற செல்வன் பற்றிய ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக். 12,13-21) மையப்படுத்தி, மூவேளை செப உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அழகான நற்செய்தி பகுதியை வாசிக்குமாறு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

லூக்கா நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள, அறிவற்ற செல்வன் உவமை பற்றி விளக்கிய திருத்தந்தை, எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்ற பேராசையை விலக்கி நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அறிவற்ற செல்வன், தனக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் மகிழ்வாக இருப்பதாக நம்பினான், தான் சேமித்துவைத்த பொருள்களில் பாதுகாப்பையும் உணர்ந்தான் என்றுரைத்த திருத்தந்தை, செல்வனின் திட்டங்களுக்கும், அவனுக்காக கடவுள் வைத்திருக்கும் வாக்குறுதிக்கும் இடையே நிலவும் முரண்பாடு வெளிப்படும்போது, இந்தக் கதை உயிரூட்டம் பெறுகிறது என்றார்.

அந்த செல்வன் அறிவற்றவன், ஏனெனில், வாழ்வில் கடவுளைப் புறக்கணித்தான், கடவுளை தன் வாழ்வில் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றுரைத்த திருத்தந்தை, நாம் எதைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்பதற்கு, இந்த உவமை ஓர் எச்சரிக்கையாக உள்ளது என்று கூறினார்.

உலகப் பொருள்கள் நம் வாழ்வுக்கு அவசியமானவைதான், ஆனால், அவையே, நம் வாழ்வின் இறுதி இலக்கை எட்டுவதற்கான கருவிகளாக இருத்தலாகாது, மாறாக, அப்பொருள்கள், நேர்மையாக வாழவும், மிக அதிகத் தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், உதவுபவைகளாக இருக்க வேண்டும் என்று கூறினார், திருத்தந்தை.   

செல்வங்கள், உண்மையான செல்வக்குவியலிலிருந்து நம்மை திசை திருப்பும் மற்றும் இதயத்தைக் கட்டுப்படுத்தும், உண்மையான செல்வக்குவியல், விண்ணகத்தில் உள்ளது   என்பதை உணர்வதற்கு, இயேசு இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறார் எனக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எதார்த்த வாழ்விலிருந்து ஒதுங்கி வாழ்வதென்பது அல்ல, மாறாக, இவ்வாழ்வில், உண்மையான மனித மாண்பை உருவாக்கும், நீதி, ஒருமைப்பாடு, வரவேற்பு, உடன்பிறந்த உணர்வு, அமைதி, ஆகிய உண்மையான விழுமியங்களைக் கொண்டிருக்கும் பொருள்களை நாடித் தேட வேண்டும், இவ்வாறு தேடுவதால், அன்பு புரிந்துகொள்ளப்பட்டு, வாழப்படும், அவையே உண்மையான மகிழ்வின் ஊற்றாகும் என்று திருத்தந்தை கூறினார்.    

உலகப் பொருள்களை அளவுக்கதிகமாகத் தேடுவது, கவலை, பகைமை, சாக்குப்போக்கு சொல்லுதல், போர் போன்றவைக்கு இட்டுச்செல்லும், இன்று உலகில் பேராசையால் எத்தனை போர்கள் என்றும், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2019, 15:19