தேடுதல்

Vatican News
மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை  (Vatican Media)

விண்ணேற்புப் பெருவிழா - திருத்தந்தையின் மூவேளை செப உரை

துன்பங்களாலும், ஐயங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, தங்கள் பார்வையை, கீழ்நோக்கித் திருப்பி வாழும் ஆயிரமாயிரம் மனிதர்களின் பார்வைகளை விண்ணகம் நோக்கித் திருப்ப, மரியா விண்ணேற்பு அடைந்துள்ளார் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வில் நம்மை வந்தடையும் நல்ல செய்திகளுக்காக, முடிவுகளுக்காக, உவகை கொள்ளும் நாம், இறைவனில் பேருவகை கொள்ளுமாறு, அன்னை மரியா நமக்குச் சொல்லித்தருகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று கூறினார்.

ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா கொண்டாடப்பட்டதையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில், மரியன்னையின் புகழ்ப்பாடலை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவன் மீது கண்களைப் பதித்து...

நம்மைச் சுற்றி நிகழும் சிறு, சிறு விடயங்களில் மூழ்கி, தொலைந்துபோகாமல், இறைவன் மீது நம் கண்களைப் பதித்து, அவரில் பேருவகை கொள்வதற்கு, மரியா நமக்குச் சொல்லித்தருகிறார் என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மரியன்னையைப்போல் இறைவனில் நாம் மகிழ்வைக் கண்டடைந்தால், வாழ்வில் நிகழும் பல அற்பத்தனமான சங்கடங்கள் நம்மைவிட்டு விலகும் என்றும், இறைவன் ஆற்றும் அரும்பெரும் செயல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவுறுத்தினார்.

விண்ணக வாயிலாக விளங்கும் மரியா

நம்மைப்போல ஒரு மனிதப் பிறவியாக இவ்வுலகில் வாழ்ந்த மரியா, உடலோடும், ஆன்மாவோடும் நித்திய மகிழ்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது நமக்கு பெரும் நம்பிக்கையைத் தருகிறது என்று திருத்தந்தை கூறினார்.

துன்பங்களாலும், ஐயங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, தங்கள் பார்வையை, கீழ்நோக்கித் திருப்பி வாழும் ஆயிரமாயிரம் மனிதர்களின் எண்ணங்களையும், பார்வைகளையும் விண்ணகம் நோக்கித் திருப்ப, மரியா இன்று விண்ணேற்பு அடைந்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் இறுதியில் கூறினார்.

விண்ணக வாயிலாக விளங்கும் புனித கன்னி மரியா, இவ்வுலகின் அற்பத்தனங்களிலிருந்து நம்மை விடுவித்து, உண்மையான விண்ணக அழகைக் கண்டு களிக்க உதவி செய்வாராக என்ற செபத்துடன் திருத்தந்தை தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

15 August 2019, 12:20