திருத்தந்தை அனுப்பும் செய்தி திருத்தந்தை அனுப்பும் செய்தி 

கிறிஸ்தவர்களிடையே கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வு மேலோங்க

எண்ணற்ற மக்களின் துன்பங்களை, குறிப்பாக, ஏழைகள், மற்றும், வலுவற்றோரின் துன்பங்களை அகற்றும் நோக்கத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய பிறரன்பின் நற்செய்திக்கும் சாட்சிகளாக செயல்படும்வண்ணம், அர்ப்பணத்துடன் புரிந்துகொள்ளுதலையும் ஒத்துழைப்பையும் எடுத்துசெல்ல அழைப்புப்பெற்றுள்ளோம் என, கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் தூரின் நகரில் ஆகஸ்ட் 25ம் தேதி இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள, மெத்தடிஸ்ட் மற்றும் Waldensian கிறிஸ்தவ சபைகளின் ஆயர் மாமன்றக்கூட்டத்திற்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, தனிப்பட்ட முறையில், தானும், கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ சபைகளோடு கொண்டுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்த, இதனை, நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்களிடையே, கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வு மேலோங்கவும், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே, ஒன்றிப்பு வளரவும், மெத்தடிஸ்ட் மற்றும் Waldensian கிறிஸ்தவ சபையினருடன் இணைந்து இறைவனிடம் செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எண்ணற்ற மக்களின் துன்பங்களை, குறிப்பாக ஏழைகள், மற்றும், வலுவற்றோரின் துன்பங்களை அகற்றும் நோக்கத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க முடியும் என, தன் செய்தியில், மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

180 பிரதிநிதிகளுடன் இத்தாலியின் தூரின் நகரில் இஞ்ஞாயிறன்று ஆரம்பித்துள்ள மெத்தடிஸ்ட் மற்றும் Waldensian கிறிஸ்தவ சபைகளின் மாமன்றக்கூட்டம், 30ம் தேதி, இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வரும்.

 மதச் சுதந்திரம், அரசுகளுடன் உறவு, சமுதாயக் கடமைகள், மனித உரிமைகள் என பல்வேறு தலைப்புக்களில் இம்மாமன்றக்கூட்டம் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.

இக்கூட்டத்தின்போது திரட்டப்படும் நிதி, தூரின் நகரில் உள்ள Pinerolo எனுமிடத்தில் வாழும் ஏழைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்கு செலவழிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2019, 15:45