தேடுதல்

பாரிஸ் நகரின் நோத்ரு தாம் பேராலயத்தின் முன்னால்  அன்னை மரியா பவனி பாரிஸ் நகரின் நோத்ரு தாம் பேராலயத்தின் முன்னால் அன்னை மரியா பவனி 

விசுவாசிகள் புதிய மனித சமுதாயத்தைச் சமைப்பவர்கள்

மரியா, ஓர் உண்மையான அன்னையைப் போல, நம் வாழ்வின் போராட்டங்களில் நம்முடன் இருக்கிறார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இயேசு கிறிஸ்துவில் வேரூன்றப்பட்ட புதிய மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவர்களாகச் செயல்படுமாறு, பாரிஸ் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி மாலையில், பாரிஸ் நகரின் நோத்ரு தாம் பேராலயம் தீயினால் சேதமடைந்த நான்கு மாதங்களுக்குப்பின், பாரிஸ் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கர், மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, பாரம்பரியமாக நடத்தும் அன்னை மரியா பவனியை, ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று மேற்கொண்டனர். அதற்குமுன்னர், அப்பேராலயத்தில், இப்பெருவிழா திருப்பலியை, பாரிஸ் உயர்மறைமாவட்ட பேராயர் Michel Aupetit அவர்கள் நிறைவேற்றினார்.

இந்நிகழ்வுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பாரிஸ் உயர்மறைமாவட்ட பேராயர் Aupetit அவர்களுக்கு, அனுப்பிய செய்தியை, அப்பேராலய அதிபர் அருள்பணி Paul Chauvet அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் வாசித்தார்.  

பாரிஸ் கத்தோலிக்கருடன், ஆன்மீக முறையில் திருத்தந்தை நெருங்கிய தோழமையுணர்வு கொண்டுள்ளார் என்றும், மரியா, ஓர் உண்மையான அன்னையைப் போல, நம் வாழ்வின் போராட்டங்களில், நம்முடன் பயணிக்கிறார் மற்றும், கடவுளின் மிக நெருக்கமான அன்பை களைப்பின்றி பரப்புகிறார் என்றும், அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இத்திருப்பலியின்போது, பிரான்ஸ் நாட்டை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்தார், பாரிஸ் பேராயர் Aupetit. பிரான்ஸ் அரசர் 13ம் லூயிஸ் அவர்கள், பிரான்ஸ் நாட்டை, புனித கன்னி மரியிடம் அர்ப்பணித்த நிகழ்வு, பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அர்ப்பண நிகழ்வு, 1638ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் நாள் முதன்முதலில் நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2019, 15:09