தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்குத் தயாரிப்பாக காணொளிச் செய்தி புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்குத் தயாரிப்பாக காணொளிச் செய்தி 

உலகம், புலம்பெயர்ந்தோரிடம் கொடூரமாக நடந்துகொள்கிறது

சிறியோர் மற்றும் ஏழைகள் மீது, நீங்கள் கவனம் செலுத்துவதன் வழியாக, துன்புறும் மக்களுக்கு, இரவில் விண்மீன்களைச் சுடர்விடச் செய்ய முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகின் உண்மையான வளர்ச்சி, அனைத்து மனிதரையும் உள்ளடக்கி, அனைவரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திலும், வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளிலும், அக்கறை காட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

வருகிற செப்டம்பர் 29ம் தேதியன்று திருஅவை சிறப்பிக்கும், 105வது புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கு, கிறிஸ்தவர்களைத் தயாரிக்கும் விதமாக, “புலம்பெயர்ந்தோர் பற்றி மட்டுமல்ல” என்ற தலைப்பில், ஜூலை, 02, இச்செவ்வாயன்று, வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.18,10)” என்ற இயேசுவின் திருச்சொற்களுடன் இச்செய்தியைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மட்டுமல்ல, வேறு எவரும் ஒதுக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

உயர்ந்தோர் எனத் தங்களைக் கருதி, மற்றவரை ஒதுக்கி வாழ்வதாக, ஒவ்வொரு நாளும் மாறிவரும் இன்றைய உலகம், அது ஒதுக்குபவர்களிடம் மிகவும் கொடூரமானதாகவும் ஒவ்வொரு நாளும் மாறி வருகிறது என்றும், சில செல்வாக்குப்பெற்ற சந்தைகளின் ஆதாயங்களுக்காக, வளரும் நாடுகள், தனது மிகச்சிறந்த இயற்கை மற்றும் மனித வளங்களைத் தொடர்ந்து இழந்து வருகின்றது என்றும் திருத்தந்தை, அந்தக் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சில பகுதிகளை மட்டும் போர்கள் பாதிக்கின்றன, ஏனைய பகுதிகளில் ஆயுத உற்பத்திகளும், வர்த்தகமும் இடம்பெறுகின்றன, இவை, போர்களால் புலம்பெயரும் மக்களை ஏற்பதற்கு விரும்பவில்லை, பல நேரங்களில் அமைதி பற்றி பேசுகிறோம், அதேநேரம் ஆயுதங்களை விற்பனை செய்கிறோம் எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் மொழியில் வெளிப்படும் இந்த வெளிவேடத்தனம் பற்றி நாம் பேசலாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை, ஏழைகள், மிகவும் நலிந்தவர்கள், மேஜைகளில் அமரத் தடைசெய்யப்படுபவர்கள் மற்றும் விருந்துகளில் மிஞ்சும் உணவுத் துண்டுகளால் தம் பசியாற்றுகின்றவர்களே, இவற்றால் எப்போதும் துன்புறுவோர் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய மக்களுக்கு உதவி செய்வதற்கு, திருஅவை அச்சமின்றி செயல்படும் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதரை ஒதுக்கிவிட்டு இடம்பெறும் வளர்ச்சி, செல்வரை மேலும் செல்வர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்குகின்றது என்றும் எச்சரித்துள்ளார்.

டுவிட்டர்

மேலும், சமுதாயத்தில், ஏழைகள் மற்றும் மிகச் சிறியோரை மையப்படுத்தி, ஜூலை, 02, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தியிலும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“சிறியோர் மற்றும் ஏழைகள் மீது, நீங்கள் கவனம் செலுத்துவதன் வழியாக, துன்புறும் மக்களுக்கு, இரவில் விண்மீன்களைச் சுடர்விடச் செய்ய முடியும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

02 July 2019, 15:40