உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை கூட்டம் உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை கூட்டம் 

உக்ரைன் கத்தோலிக்கத் திருஅவை மீது திருத்தந்தை ஆர்வம்

உக்ரைன் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சூழலில், கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகர வேண்டியது, கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவையின் முக்கிய பணி

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டில் சிக்கலான சூழ்நிலை நிலவுவதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை  திருஅவை பிரதிநிதிகள் வத்திக்கானில், ஜூலை 05, இவ்வெள்ளியன்று, இரண்டு நாள் கூட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், ஜூலை 05, இவ்வெள்ளி, ஜூலை 06, இச்சனி ஆகிய இரு நாள்களில் நடைபெறும் இக்கூட்டத்தில், உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் தலத்திருஅவைத் தலைவரான, Kiev-Halyč பேராயர் Svjatoslav Shevchuk அவர்களும், அதன் நிரந்தர ஆயர் மன்ற உறுப்பினர்கள், பேராயர்கள் மற்றும் அந்நாட்டுடன் தொடர்புடைய திருப்பீட தலைமையகத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

குழப்பமான சூழலை எதிர்கொள்ளும் உக்ரைன் நாட்டு கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை விசுவாசிகளுடன், தனது அருகாமையை உணர்த்தும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில மாதங்களுக்கு முன்னர், இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என்று திருப்பீடம் கூறியுள்ளது.

உக்ரைன் நாட்டின் வாழ்வு மற்றும் தேவைகள் பற்றி ஆழமாக ஆராய்வதற்கு வாய்ப்புக்களை வழங்கவுள்ள இக்கூட்டம், கத்தோலிக்க திருஅவை, குறிப்பாக, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் தலத்திருஅவை, நற்செய்தி அறிவிப்பில் இன்னும் சிறப்பாக எவ்வாறு தன்னை அர்ப்பணிக்க முடியும் என்பது பற்றியும் கலந்துரையாடும் என்று திருப்பீடம் கூறியது. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டிற்காகச் செபிக்குமாறு, பலமுறை விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், இவ்வெள்ளியன்று உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாடு எதிர்கொள்ளும் சிக்கலான சூழலில், கிறிஸ்தவ நம்பிக்கைக்குச் சான்று பகர வேண்டியது, கிரேக்க-கத்தோலிக்கத் தலத்திருஅவையின் முக்கிய பணி என்று கூறினார்.

இத்திருஅவை தனது மேய்ப்புப் பணியில் பல்வேறு வழிகளில் சான்று பகர அழைக்கப்பட்டுள்ளது என்றும், முதலில், செபம், அடுத்து, விசுவாசிகளுக்கு அருகாமையில் இருப்பது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த இரு நாள்களும், நற்செய்தியின் உணர்வில், நல்லவைகளைத் தேடும் முயற்சியில், சுதந்திரமான உரையாடல், ஒருவர் ஒருவருக்குச் செவிமடுத்தல், பகிர்தல் போன்றவை தேவைப்படுகின்றன என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2019, 15:01