இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலுள்ள ஓவியம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலுள்ள ஓவியம்  

துயர நேரங்களில், இறைவனில் ஆழ்ந்த நம்பிக்கை தேவை

வாழ்வில் அமைதி நிலவும் நேரங்களைவிட, துன்ப நேரங்களில், நம் நம்பிக்கையாகிய இயேசுவோடு ஒன்றித்திருப்பதற்கு விசுவாசிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

விசுவாசிகள், மற்ற எல்லா நேரங்களையும்விட, தங்களின் துயர நேரங்களில், இறைவனில் ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 05, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“வாழ்வில் அமைதி நிலவும் நேரங்களைவிட, துன்ப நேரங்களில், நம் நம்பிக்கையாகிய இயேசுவோடு ஒன்றித்திருப்பதற்கு விசுவாசிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று, இடம்பெற்றிருந்தன.

மேலும், ஜூலை 4, இவ்வியாழன் பிற்பகலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், இரஷ்ய அரசுத்தலைவர் புடின் அவர்களுக்கும் இடையே, திருப்பீடத்தில், ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலில், சிரியா, உக்ரைன், வெனெசுவேலா ஆகிய நாடுகளில் நிலவும் பிரச்சனைகள், இரஷ்யாவில் கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வுமுறை போன்றவை இடம்பெற்றன என்று, திருப்பீடம் அறிவித்தது.

சுற்றுச்சூழல் முன்வைக்கும் சவால்கள் குறித்தும், இவ்விரு தலைவர்களும் கலந்துரையாடினர் என்றும், திருப்பீடம் அறிவித்தது.

புடின் அவர்கள், இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தது, மூன்றாம் முறையாகும்.

மேலும், ஜூலை 4, இவ்வியாழனன்று, புடின் அவர்கள், வத்திக்கானுக்கு வந்தது, அவரது  ஆறாவது பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2019, 15:07