உரோம் ரெஜினா முந்தி மருத்துவ இல்லத்தை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் ரெஜினா முந்தி மருத்துவ இல்லத்தை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

மனித வர்த்தகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் விடுதலைப் பெற...

மனித மாண்பும் விடுதலையும் பறிக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளின் கூக்குரல்களுக்கு ஆக்கபூர்வமான பதிலுரை வழங்க, இறை உதவியை நாடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்போர் விடுதலைப் பெறவேண்டும் என்று இறைவனை நோக்கி செபிப்போம் என, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்களை வர்த்தகப் பொருட்களைப்போல் நடத்துவதை எதிர்க்கும் உலக நாள், ஜூலை 30, இச்செவ்வாயன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டதையொட்டி டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மனித வர்த்தகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் விடுதலைப் பெறவும், மனித மாண்பும் விடுதலையும் பறிக்கப்பட்டுள்ள நம் சகோதரர் சகோதரிகளின் அழுகுரல்களுக்கு ஆக்கபூர்வமான பதிலுரை வழங்கவும், நமக்கு உதவ வேண்டும் என இறைவனை நோக்கிச் செபிப்போம். மனித வர்த்தகம் முடிவுக்கு வரட்டும்' என அதில் எழுதியுள்ளார்.

மேலும், இச்செவ்வாய் காலை, பாப்புவா நியூ கினி நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு திருப்பயணிகள் குழுவை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து, அவர்கள் நாட்டு நிலைகள் குறித்து, அவர்களுடன் உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, புனித வின்சென்ட் தெ பால் பிறரன்பு புதல்வியர் சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகளால் உரோம் நகரில் நடத்தப்படும் ரெஜினா முந்தி மருத்துவ இல்லத்தை இஞ்ஞாயிறு பிற்பகலில் சென்று சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அருள்சகோதரி Maria Mucci அவர்கள், நோய்வாய்ப்பட்டு குணம் பெற்று வருவதை முன்னிட்டு, அவரை சந்திக்க சென்றதுடன், மருத்துவ இல்லத்தில் உள்ள ஏனைய நோயாளிகளையும், பணியாளர்களையும் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2019, 16:12