தேடுதல்

Vatican News
கார்மேல் அன்னை மரியா கார்மேல் அன்னை மரியா 

கார்மேல் அன்னை மரியா விழா டுவிட்டர் செய்தி

சிலுவைப்போர் சமயத்தில், பாதுகாப்பான இடம் தேடிய துறவிகள் கார்மேல் மலைக்குச் சென்று அங்கு தங்கினர். இன்று திருஅவையில் உள்ள கார்மேல் சபைத் துறவிகள், அன்று அந்த மலையில் வாழ்ந்த துறவிகளின் வழிவருபவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஜூலை 16, இச்செவ்வாயன்று, கார்மேல் அன்னை மரியா திருவிழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘கார்மேல் அன்னை மரியா’ (#OurLadyofMountCarmel) என்ற ‘ஹாஷ்டாக்’குடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

“கார்மேல் அன்னை மரியா திருவிழாவான இன்று நாம், கிறிஸ்துவின் சிலுவையருகில் நின்ற கன்னி மரியா பற்றித் தியானிக்கிறோம், அது, கிறிஸ்துவுக்கு நெருக்கமான திருஅவையின் இடமும்கூட” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

எபிரேய மொழியில் தோட்டம் எனப் பொருள்படும் கார்மேல் மலை, பாலஸ்தீன் நாட்டின் ஹைபர் வளைகுடாவில், கடல் மட்டத்திற்கு 1742 அடி உயரத்தில் அமைந்துள்ளது. விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள கார்மேல் மலையில், இறைவாக்கினர் எலியா தங்கி, மழையின்றி கடும் வறட்சியால் துன்புற்ற இஸ்ரேல் நாட்டிற்காகச் செபித்தார். அங்கு அவர் கன்னி மரியாவின் அடையாளமாக, கார்மேகங்களைக் கண்டார் (எச.7:14). நாட்டில் மழையும் பெய்தது.

12ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 13ம் நூற்றாண்டில், சிலுவைப்போர் சமயத்தில், பாதுகாப்பான இடம் தேடிய துறவிகள் கார்மேல் மலைக்குச் சென்று அங்கு தங்கினர். 13ம் நூற்றாண்டில், புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்ட புனித சைமன் ஸ்டாக் என்பவர், அத்துறவிகளோடு சேர்ந்து வாழத் தொடங்கினார்.1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, ஞாயிறன்று, அன்னை மரியா, ஒரு கரத்தில் குழந்தை இயேசுவுடனும், மற்றொரு கரத்தில், மாநிறத்தில் உத்தரியத்துடனும், புனித சைமன் ஸ்டாக் அவர்களுக்குத் தோன்றினார். இன்று திருஅவையில் உள்ள கார்மேல் சபைத் துறவிகள், அன்று கார்மேல் மலையில் வாழ்ந்த துறவிகளின் வாரிசுகள். அந்த மலையில் அந்த துறவிகள் அன்னை மரியாவுக்கு ஒரு சிற்றாலயம் எழுப்பினர். அன்னை மரியா மீது கொண்டிருந்த பக்தியால், கழுத்தில் உத்தரியத்தை அணியும் பக்தியையும், அவர்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தனர்.    

16 July 2019, 15:03