தேடுதல்

குழந்தை Alfie Evansக்காக வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் செபித்த பக்தர்கள் குழந்தை Alfie Evansக்காக வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் செபித்த பக்தர்கள் 

"ஒவ்வொரு உயிரும் மதிப்புள்ளது, எப்போதும்" - திருத்தந்தை

கருவில் உருவாவது முதல், இயற்கையான மரணம் அடையும் வரை, மனித உயிர்கள் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாரிஸ் மாநகரில் ஜூலை 11, இவ்வியாழனன்று இறையடி சேர்ந்த வின்சென்ட் லாம்பெர்ட் என்பவரின் மரணத்தை மையப்படுத்தி, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"இறைவன், வின்சென்ட் லாம்பெர்ட்டை தன் கரங்களில் அரவணைத்து வரவேற்பாராக. வாழத் தகுதியற்றவர்கள் என்று நாம் எண்ணும் மனிதரை, வீசியெறியும் கலாச்சாரத்தை, நாம் உருவாக்காமல் இருப்போமாக: ஒவ்வொரு உயிரும் மதிப்புள்ளது, எப்போதும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

பாரிஸ் மாநகரின் வின்சென்ட் லாம்பெர்ட்

பாரிஸ் மாநகரின் ஒரு மருத்துவ மனையில், உடல் உறுப்புக்களில் உணர்விழந்து, மூளையும் பாதிக்கப்பட்ட நிலையில்,  2008ம் ஆண்டு முதல் வாழ்ந்துவந்த வின்சென்ட் லாம்பெர்ட் என்ற 42 வயது நிறைந்த மனிதர், வாழ்வு ஆதாரங்கள் நீக்கப்பட்டு, இறப்பதற்கு விடப்பட்ட நிலையில், ஜூலை 10, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "வாழ்வதற்கு யார் தகுதியுடையவர், யார் தகுதியற்றவர் என்ற தெரிவுகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு வாழ்வையும், அதன் ஆரம்பம் முதல் இயற்கையான இறுதி வரை காப்பதே, மனிதாபிமானம் உள்ள சமுதாயம்" என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.

இவ்வாண்டு மே மாதம் 20ம் தேதி, லாம்பெர்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ உதவிகள் நிறுத்தப்படும் என்று, பாரிஸ் மருத்துவமனை அறிவித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 'தீவிர நோய்களோடு வாழ்ந்துகொண்டிருப்போருக்காக செபிப்போம். இறைவனின் கொடையான வாழ்வை அதன் துவக்கத்திலிருந்து இயற்கையான முடிவுவரை, பாதுகாப்போம். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு நம்மை உட்படுத்தாதிருப்போம்' என்று விண்ணப்பித்திருந்தார்.

ஆல்ஃபி ஈவான்ஸ், மற்றும், வின்சென்ட் லாம்பெர்ட்

மேலும், நீண்டகாலமாக, மருத்துவக் கருவிகளின் உதவியுடனேயே வாழ்ந்துவரும் இங்கிலாந்தின் குழந்தை, ஆல்ஃபி ஈவான்ஸ், மற்றும், பிரான்சின் வின்சென்ட் லாம்பெர்ட் ஆகிய இருவருக்காகவும் செபிக்குமாறு, கடந்த 2018ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், விண்ணப்பித்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதைத் தொடர்ந்து, மூன்று நாள்களுக்குப் பின், ஏப்ரல் 18, புதன்கிழமை, தன் மறைக்கல்வி உரையில், மீண்டும் இவ்விருவருக்காகவும் செபிக்கும்படி மக்களிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் ஒருவரே வாழ்வின் மீது அதிகாரம் கொண்டவர், வாழ்வைக் காப்பது ஒன்றே, நமக்கு வழங்கப்பட்டுள்ள கடமை என்று வலியுறுத்திக் கூறினார்.

யுத்தனேசியா, அனைவருக்குமே ஒரு தோல்வி

இவ்வாண்டு ஜூன் மாதம் 2ம் தேதி, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவா பொத்தோவேன் என்ற 17 வயது இளம்பெண், மனத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள், மற்றும் தன் பெற்றோரின் அனுமதியுடன், தன் உயிரை மாய்த்துக்கொண்டதையடுத்து, திருத்தந்தை, யுத்தனேசியா அல்லது, மருத்துவ உதவியுடன் நடைபெறும் தற்கொலை குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

"யுத்தனேசியா, மற்றும், மருத்துவ உதவியுடன் நடைபெறும் தற்கொலை, நம் அனைவருக்குமே ஒரு தோல்வி. விரக்தியால் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விழைவோரை, அப்படியே விட்டுவிடாமல், அவர்வளுக்கு நம்பிக்கையூட்டுவது நம் கடமை" என்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியிருந்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2019, 15:33