தேடுதல்

மருத்துவர்களுடன் திருத்தந்தை மருத்துவர்களுடன் திருத்தந்தை 

வாழ்வைப் பாதுகாப்பது மருத்துவர்களின் கடமை - திருத்தந்தை

வாழ்வை, ஆரம்பம் முதல் இயற்கையான இறுதி வரை காப்பதே, மனிதாபிமானம் உள்ள சமுதாயம். மருத்துவர்கள், வாழ்வைக் காக்கும் பணியில் ஈடுபடவேண்டுமேயொழிய, அதை எடுப்பதற்கு அல்ல - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வைப் பாதுகாப்பது சமுதாயத்தின் கடமை என்பதையும், குறிப்பாக, மருத்துவர்கள், வாழ்வைக் காக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழுத்தந்திருத்தமான ஒரு கருத்தை, ஜூலை 10 இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

"ஆதரவின்றி, இறப்பதற்கு விடப்படும் நோயுற்றோருக்காக நாம் செபிக்கிறோம். வாழ்வதற்கு யார் தகுதியுடையவர், யார் தகுதியற்றவர் என்ற தெரிவுகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு வாழ்வையும், அதன் ஆரம்பம் முதல் இயற்கையான இறுதி வரை காப்பதே, மனிதாபிமானம் உள்ள சமுதாயம். மருத்துவர்கள், வாழ்வைக் காக்கும் பணியில் ஈடுபடவேண்டுமேயொழிய, அதை எடுப்பதற்கு அல்ல." என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஜூலை 10, இப்புதன் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,052 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, வெளியிடப்படும் புகைப்படங்கள், மற்றும், காணொளிகள் அடங்கிய instagram தளத்தில், அவர், ஜூலை 8, இத்திங்களன்று, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புலம்பெயர்ந்தோருக்காக ஆற்றிய திருப்பலியின் புகைப்படங்கள் இறுதியாக இடம்பெற்றுள்ளன.

2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, இத்தாலியின் லாம்பதூசா தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததன் ஆறாம் ஆண்டு நினைவையொட்டி, திருத்தந்தை  நிறைவேற்றிய இத்திருப்பலியின் புகைப்படங்கள் உட்பட, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 737 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2019, 14:52