தேடுதல்

வெனிசுவேலா நாட்டு சிறார் வெனிசுவேலா நாட்டு சிறார் 

கடல் பயணிகள் மற்றும் மீனவர்களுக்காக செபிக்கும் திருத்தந்தை

தனக்கு அடுத்திருப்பவரை அன்புகூர்வதன் வழியாக கடவுளை எவ்வாறு முழு உள்ளத்தோடு அன்புகூர்வது என்பதைக் காட்டுகிறார் நல்ல சமாரியர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஜூலை 14, இஞ்ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, 'உலக கடல் ஞாயிறு' குறித்து திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'கடல் பயணிகள் மற்றும் மீனவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கடல் ஞாயிறன்று, அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிக்கும் அதேவேளை, அவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கிறேன்', என உரைத்துள்ளார்.

தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், 'இன்றைய நற்செய்தி வாசகத்தில், நல்ல சமாரியரை நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக இயேசு முன்வைக்கிறார். தனக்கு அடுத்திருப்பவரை அன்புகூர்வதன் வழியாக கடவுளை எவ்வாறு முழு உள்ளத்தோடு அன்புகூர்வது என்பதைக் காட்டும் நல்ல சமாரியர், உண்மை மத உணர்வு பற்றியும், முழு மனித சமுதாயமும் எப்படி வாழவேண்டும் என்பதையும் காட்டி நிற்கிறார்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், வெனிசுவேலா நாட்டு மக்களை மனதில் கொண்டு 'தொடர்ந்து நெருக்கடிகளால் துன்புறும் மக்களோடு என் அருகாமையை அறிவிக்கிறேன். இம்மக்களின் துன்பங்களை அகற்றிடும் பொறுப்பிலுள்ளோர் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள இறைவன் உதவ வேண்டுமாறு செபிப்போம்' என விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2019, 16:23