தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூலை மாத இறைவேண்டல்  காணொளி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூலை மாத இறைவேண்டல் காணொளி 

நீதிபதிகளுக்காகவும், வழக்கறிஞர்களுக்காகவும் செபிப்போம்

நீதி வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போர், நேரிய பண்புடையவர்களாக பணியாற்றவும், அதன் பயனாக, அநீதி, இறுதி வெற்றியடையாமல் இருக்கவும் நாம் செபிப்போமாக - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் பணியாற்றும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், நேரிய பண்புடையவர்களாகவும், மனித மாண்பை மதிப்பவர்களாகவும் பணியாற்ற, செபிப்போமாக என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஜூலை மாத இறைவேண்டல் கருத்தாக வெளியிட்டார்.

திருத்தந்தையின் செபக்கருத்துக்களை, ஒவ்வொரு மாதமும், The Pope Video காணொளி வழியே வெளியிட்டுவரும் இறைவேண்டலின் திருத்தூதுப் பணி அமைப்பு, ஜூலை 4, இவ்வியாழனன்று வெளியிட்ட காணொளியில், நீதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்காக செபிக்குமாறு, திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

நீதிபதிகள் எடுக்கும் முடிவுகள், குடிமக்களின் உரிமைகள், உடைமைகள் ஆகியவற்றை பாதிக்கின்றன என்று இக்காணொளியின் துவக்கத்தில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, அவர்கள் எடுக்கும் முடிவுகள், எவ்வித வெளி அழுத்தங்களுக்கும் இடம் தராதவண்ணம், நடுநிலையோடு எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் உண்மையை விட்டுக்கொடுக்காத இயேசுவின் எடுத்துக்காட்டை நீதிப்பணியில் ஈடுபட்டுள்ளோர் பின்பற்றவேண்டும் என்று திருத்தந்தை தன் இறைவேண்டல் கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

நீதி வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருப்போர், நேரிய பண்புடையவர்களாக பணியாற்றவும், அதன் பயனாக, இவ்வுலகில் பரவலாக காணப்படும் அநீதி, இறுதி வெற்றியடையாமல் இருக்கவும் நாம் செபிப்போமாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஜூலை மாத இறைவேண்டல் கருத்தை நிறைவு செய்துள்ளார்.

04 July 2019, 14:51