தேடுதல்

Vatican News
செபத்தில் ஆழ்ந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தில் ஆழ்ந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அர்ஜென்டீனா யூத மையம் தாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு

போருக்கு இட்டுச்செல்லும் செயல்களைத் தூண்டிவிடுவது, மதம் அல்ல, மாறாக, அறிவற்ற செயல்களைத் தூண்டும் மனிதரின் இதயங்களில் நிறைந்துள்ள இருள்தான்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மதத்தின் பெயரால் உயிர்களையும், நம்பிக்கையையும் அழிக்கின்ற மற்றும், கடவுளின் பெயரை வீணாகப் பயன்படுத்தும் அறிவற்றதன்மை குறித்து கவலை தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனா தலைநகர் புவனெஸ் அயிரஸ் நகரில் 25 ஆண்டுகளுக்குமுன் AMIA யூதமத மையம் பயங்கரவாத குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டதை நினைவுகூர்ந்து, அம்மையத்திற்கு,  ஜூலை 12, இவ்வெள்ளியன்று மடல் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  போருக்கு இட்டுச்செல்லும் செயல்களைத் தூண்டிவிடுவது, மதம் அல்ல, மாறாக, அறிவற்ற செயல்களைத் தூண்டும் மனிதரின் இதயங்களில் நிறைந்துள்ள இருள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

1994ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, புவனெஸ் அயிரஸ் நகரிலுள்ள யூத மத தலைமை அலுவலகம் பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டதில் 85 பேர் உயிரிழந்தனர் மற்றும், 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

இந்த முட்டாள்தனமான செயலில் தங்கள் வாழ்வை இழந்தவர்களுக்கு இறைவன் நிறைசாந்தியை அளிக்குமாறும், இன்னும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், இதில் உடல்களிலும், ஆன்மாக்களிலும் காயமடைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்காகவும் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாக்குதலில் பலியான யூத மற்றும் கிறிஸ்தவக் குடும்பங்களை, அது நடத்தப்பட்ட ஜூலை 18ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும் நினைத்துச் செபிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இன்று உலகில், மூன்றாம் உலகப் போர் துண்டு துண்டாக நடத்தப்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த அறிவற்ற செயல், நிச்சயமாக, அர்ஜென்டீனா நாட்டுடன் மட்டும் நிறுத்தப்படவில்லை, கிழக்கிலிருந்து மேற்காக, எல்லைகளின்றி,  எல்லா இடங்களிலும், மக்களின் வாழ்வு மற்றும், வருங்காலத்தின் மீது நடத்தப்படுகின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவலை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்கள், மணப்பெண்களை, கைம்பெண்களாக, பிள்ளைகளை அநாதைகளாக ஆக்குகின்றன, இவையனைத்தும் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இடம்பெறுகின்றன என்றுரைத்துள்ள திருத்தந்தை, புவியியல் எல்லைகளைக் கடந்து, நாம் எல்லாரும் உடன்பிறந்த உணர்வுடன், ஒன்றிணைந்து வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

13 July 2019, 16:18