புனித பேதுருவின் புனிதப்பொருளை, கர்தினால் Kurt Koch, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் குழுவினரிடம் வழங்குதல் புனித பேதுருவின் புனிதப்பொருளை, கர்தினால் Kurt Koch, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் குழுவினரிடம் வழங்குதல் 

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தைக்கு திருத்தந்தையின் பரிசு

புனித பேதுருவின் எலும்புகள் அடங்கிய ஒரு பேழையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களுக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 29, கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற திருத்தூதர்களான புனித பேதுரு, புனித பவுல் பெருவிழாவில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வந்திருந்த கான்ஸடான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள் குழுவின் வழியே, முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்களுக்கு, உன்னத பரிசு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

புனித பேதுரு, புனித பவுல் பெருவிழா திருப்பலிக்குப்பின், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளிடம், தன் சகோதரர் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களுக்கு தனித்துவமிக்க பரிசை அனுப்புவதாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுருவின் புனிதப்பொருள் ஒன்றை அனுப்பிவைத்தார்.

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் ஒரு சிறு கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த இந்தப் புனிதப் பொருள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு, முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் நன்றியை தெரிவித்தார்.

புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கல்லறையில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழியாக, 1950ம் ஆண்டு, புனித பேதுருவின் கல்லறை என்று உறுதி செய்யப்பட்ட தலத்திலிருந்த எலும்புகளுடன் கூடிய ஒரு பெட்டி, இந்த பசிலிக்கா பேராலயத்தின் அடிநிலைக் கல்லறையில், அனைவரின் பார்வைக்கென வைக்கப்பட்டது.

1968ம் ஆண்டளவில், புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இப்பெட்டியிலிருந்து 9 சிறு எலும்புத் துண்டுகளை எடுத்து, வத்திக்கானில் அமைந்துள்ள சிறு ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்தார்.

புனித பேதுருவின் எலும்புகள் அடங்கிய இந்தப் பேழையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பார்த்தலோமேயு அவர்களுக்குப் பரிசாக அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2019, 16:00