P.I.M.E. எனப்படும் பாப்பிறை மறைப்பணி சபையின் அருள்பணியாளர் P.I.M.E. எனப்படும் பாப்பிறை மறைப்பணி சபையின் அருள்பணியாளர் 

ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

ஸ்ரீகாகுளம் மறைமாவட்ட புதிய ஆயர் விஜய குமார் ராயராலா அவர்கள், 2014ம் ஆண்டு, பாப்பிறை மறைப்பணி சபையின் இந்திய மாநிலத் தலைவராகப் பணியைத் தொடங்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி விஜய குமார் ராயராலா (Vijaya Kumar Rayarala)  அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 16, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார்.

P.I.M.E. எனப்படும் பாப்பிறை மறைப்பணி சபையின் மாநிலத் தலைவராகப் பணியாற்றிவரும் அருள்பணி விஜய குமார் அவர்கள், 1969ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி, கம்மம் மறைமாவட்டத்தில் பிறந்தார்.

1990ம் ஆண்டில், பாப்பிறை மறைப்பணி சபையில் சேர்ந்த இவர், இந்தியாவிலும், இத்தாலியிலும் மெய்யியல் மற்றும் இறையியல் கல்வியை முடித்து, 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அருள்பணியாளராக, திருப்பொழிவு செய்யப்பட்டார்.

1998ம் ஆண்டு முதல், இரண்டாயிரமாம் ஆண்டு வரை, எலூரு புனித சவேரியார் நிறுவனத்தில் இறையழைத்தல் ஊக்குனராகவும், 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை, பாப்புவா நியு கினி நாட்டில் மறைப்பணியாளராகவும் பணியாற்றிய இவர், அதன்பின்னர், 2014ம் ஆண்டு வரை மும்பை தொழுநோயாளர் மறுவாழ்வு மையத்தில், உதவி இயக்குனர் மற்றும், இயக்குனராகப் பணியாற்றினார்.

2014ம் ஆண்டு, பாப்பிறை மறைப்பணி சபையின் இந்திய மாநிலத் தலைவராகப் பணியைத் தொடங்கிய, ஸ்ரீகாகுளம் மறைமாவட்ட புதிய ஆயர் விஜய குமார் ராயராலா அவர்கள், எலூரு மறைமாவட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 

1993ம் ஆண்டு ஜூலை முதல் தேதி, புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, பணியாற்றிவந்த, ஆயர் Innayya Chinna Addagatla அவர்கள், 2018ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, பணி ஓய்வு பெற்றதையடுத்து, இந்நாள்வரை அம்மறைமாவட்டம் ஆயரின்றி காலியாக இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2019, 14:56