தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  (� Vatican Media)

இரக்கம் காட்டுவதே அன்பின் உண்மை முகம்

உடன் வாழ் சகோதரருக்கு இரக்கம் காட்டுபவர், கடவுளுக்கும் உகந்தவராக மாறுகிறார் என்பதை நல்ல சமாரியர் உவமை வழி கற்பிக்கிறார் இயேசு - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இரக்கத்தைச் செயல்படுத்தும்போதுதான் ஒருவர் இயேசுவின் உண்மை சீடராக மாறுகின்றார், ஏனெனில், தேவையிலிருப்போருக்கு இரக்கம் காட்டுவதே அன்பின் உண்மை முகம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 14, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தியில் வழங்கப்பட்ட நல்ல சமாரியர் உவமையை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மிக அழகான விடயங்களில் நல்ல சமாரியர் உவமையும் ஒன்று, என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் கூறப்பட்டுள்ள இரக்க உணர்வே, கிறிஸ்தவர்களை அளக்கும் கோல் எனவும் எடுத்துரைத்தார்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் குலத்திற்கு வெளியே உள்ளவராக கருதப்பட்ட சமாரியரை, உயர்ந்தவராக காண்பிக்கும் இயேசு, மக்களின் தவறான எண்ணங்களை உடைத்தெறிவதுடன், உடன் வாழ் சகோதரருக்கு இரக்கம் காட்டுபவர், கடவுளுக்கும் உகந்தவராக மாறுகிறார் என்பதையும் இவ்வுவமை வழி கற்பிக்கிறார் என்றார் திருத்தந்தை.

‘வானகத்திலுள்ள உங்கள் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவராக இருங்கள்' என இயேசு கூறியது, இறைவனிடமும் நமக்கு அடுத்திருப்பவரிடமும் நாம் கொள்ளவேண்டிய அன்பு, எவ்வாறு வாழ்வின் தனிப்பட்ட, மற்றும், ஒன்றிணைந்த விதியாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது என தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

14 July 2019, 13:00