தேடுதல்

2019.07.06 Foto dell'arcivescovo Fulton Sheen 2019.07.06 Foto dell'arcivescovo Fulton Sheen 

இறை ஊழியர் ஃபுல்டன் ஷீன் பரிந்துரையால் புதுமை

இறை ஊழியர் ஃபுல்டன் ஷீன் அவர்கள், “வாழ்க்கையை வாழ்வது பெரும் மதிப்புடையது” என்ற தொலைக்காட்சி தொடரால், 1950களில் மிகவும் பிரபலமடைந்தவர். இவரின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றை, திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

போதகர்கள் சபையைச் சார்ந்த, போர்த்துக்கல் நாட்டு அருளாளர், மறைசாட்சிகளின் பர்த்தலோமேயு அவர்களை, கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர்கள் பட்டியலில் இணைத்து, அவரின் பெயரில் நடைபெறும் திருவழிபாட்டுக்கும் அனுமதியளித்துள்ளார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர்கள் பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், ஜூலை 05, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, அருளாளர் மறைசாட்சிகளின் பர்த்தலோமேயு அவர்கள் பற்றிய விவரங்களையும், புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, எட்டுப் பேரின் வீரத்துவ புண்ணியப் பண்புகள் குறித்த விவரங்களையும் சமர்ப்பித்தார்.

Braga பேராயராகப் பணியாற்றிய அருளாளர் பர்த்தலோமேயு அவர்கள், போர்த்துக்கல் நாட்டுத் தலைநகர் லிஸ்பனில், 1514ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்து, அந்நாட்டின் Viana do Casteloவில், 1590ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி இறைபதம் எய்தினார்.

ஓர் அருளாளர், புனிதர் என அறிவிக்கப்படுவதற்கு, அவரின் பரிந்துரையால் குறைந்தது ஒரு புதுமை நிகழ்ந்திருக்க வேண்டும், ஆயினும், காலம் காலமாக, அந்த அருளாளர் மீது விசுவாசிகள் கொண்டிருக்கும் பக்தி காரணமாக, திருத்தந்தை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரைப் புனிதர் பட்டியலில் இணைக்கும் முறை திருஅவையில் நிலவி வருகிறது (canonizzazione equipollente).

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு El Paso in Illinois நகரில் 1895ம் ஆண்டு, மே 8ம் தேதி பிறந்து, நியு யார்க் நகரில், 1979ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று இறந்த,  வணக்கத்துக்குரிய இறை ஊழியர் ஃபுல்டன் ஜான் ஷீன் (Fulton Sheen) அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை நிகழ்ந்துள்ளது. பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்கள், தனது மறையுரைகளுக்காக, குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்த்திய மறையுரைகளுக்காக மிகவும் அறியப்படுகின்றவர்.

லெபனான் நாட்டு முதுபெரும்தந்தையும், மாரனைட் திருக்குடும்ப அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவருமான Elia Hoyek (1843-1931) ;

இத்தாலியின் Reggio Calabria-Bova பேராயரும், Somasca குருக்கள் சபையைத் தொடங்கியவருமான Giovanni Vittorio Ferro (1901-1992) ;

இஸ்பெயின் நாட்டின் Tudela அப்போஸ்தலிக்க நிர்வாகத்தின் துணை ஆயரும், பிறரன்பு மறைபோதகர்கள் சபையை நிறுவியவருமான Angelo Riesco Carbajo (1902-1972);

போலந்து நாட்டின் மறைமாவட்ட அருள்பணியாளர் Ladislao Korniłowicz (1884-1946) ;

இத்தாலியின், ஆண்டவரின் பிரான்சிஸ்கன் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தவரும், கப்புச்சின் சபையைச் சார்ந்தவருமான Angelico Lipani (1842-1920);

பிலிப்பீன்ஸ் நாட்டின், சியன்னா புனித கத்ரீன் தொமினிக்கன் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்த Francesca dello Spirito Santo (1647-1711);

பிரான்ஸ் நாட்டின் பிறரன்பு தாய்மை அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்த, பொதுநிலை விசுவாசி Stefano Pietro Morlanne (1772-1862) ஆகிய ஏழு இறை ஊழியர்களின் வீரத்துவப் புண்ணியப் பண்புகளையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2019, 14:48