தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரை - 210719 திருத்தந்தையின் மூவேளை செப உரை - 210719  (ANSA)

தியானமும் விருந்தோம்பலும் இணையும்போது...

நம்மைத் தேடி வந்து நம் கதவுகளைத் தட்டும் ஏழைகளும், தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் நம் விருந்தோம்பல் பண்பு இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தியானம் மற்றும் செயல் என்ற இரு கூறுகளையும் இணைத்து செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்த்தா, மரியாவின் வீட்டிற்கு இயேசு சென்றதையும், அங்கு நடந்த உரையாடலையும் பற்றி பேசும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து மூவேளை செப உரையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் அருகில் அமர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிமடுக்க விரும்பிய மரியா, இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுப்பதற்கு, தன் ஏனைய வேலைகளை விட்டுவிட்டு வந்தது, நம்மை சந்திக்க இறைவன் வரும்போது நாம் மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதை காட்டி நிற்கின்றது என்றார்.

நம் வாழ்வின் பணிகளில் சிறிது நேரத்தை ஒதுக்கி அமைதியில் அமர்ந்து, இயேசு நம் அருகில் வந்து கடந்து செல்ல நாம் அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவனுக்கு செவிமடுக்கும்போது, நம் சந்தேகங்கள் மறைந்து உண்மை குடிகொள்கிறது, அச்சத்திலிருந்து அமைதி பிறக்கிறது எனவும் கூறினார்.

மரியாவின் நடவடிக்கையிலிருந்து இதனைக் கற்றுக்கொள்ளும் நாம், பிறிதொரு சகோதரியான மார்த்தாவின் நடவடிக்கையிலிருந்து விருந்தோம்பல் எனும் உயர்பண்பின் முக்கியத்துவத்தையும் அறிகிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்மைத் தேடி வந்து நம் கதவுகளைத் தட்டும் ஏழைகளும், தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறும் வகையில் நம் விருந்தோம்பல் பண்பு இருக்க வேண்டும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு வந்து நம் கதவுகளைத் தட்டும்போது, மார்த்தா மரியா என்ற இரு சகோதரிகள்போல் நாமும் இயேசுவின் அருகில் அமர்ந்து அவர் குரலுக்குச் செவிமடுத்தல், விருந்தோம்பல் பணிகளில் ஈடுபடுதல், என்ற இரு நற்பண்புகளையும் ஒன்றிணைத்துச் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

22 July 2019, 15:40