தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது திருத்தந்தை - 070719 மூவேளை செப உரையின்போது திருத்தந்தை - 070719  (AFP or licensors)

மறைப்பணியாளருக்காகச் செபிப்பது நம் கடமை - திருத்தந்தை

இயேசு வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றும் மறைப்பணியாளர்கள், இயேசுவின் சீடர்களைப்போல் மகிழ்வுடன் திரும்புவர், அவர்களது பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் பணியாற்ற போதிய வேலையாள்களை அனுப்பும்படி, அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம் என்று, ஜூலை 7, இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உலகில் சென்று நற்செய்தியை அறிவிப்பதற்கு, தன் 12 திருத்தூதர்களுடன், மேலும் 72 சீடர்களை இயேசு அனுப்பியதுபற்றி கூறும் நற்செய்தியை, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் மையக்கருத்தாக திருத்தந்தை வழங்கினார்.

திறந்த மனதுடனும், மறைபரப்புப்பணியில் ஆர்வமுடனும், மறைபரப்புப் பணியாளருக்காகச் செபிக்கவேண்டியது, நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை என்பதை, திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இயேசு, தன் சீடர்களை, நற்செய்தி அறிவிக்க அனுப்புவதற்கு முன் வழங்கிய அறிவுரைகள், இப்பணியானது, செபத்தை எவ்வாறு அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும், எவ்வாறு தன் சீடர்கள், ஏழ்மையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதையும், அமைதியையும், குணப்படுத்துதலையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்பதையும் உள்ளடக்கியிருந்தன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இயேசு வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றும் மறைப்பணியாளர்கள், இயேசுவின் சீடர்களைப்போல் மகிழ்வுடன் திரும்புவர் என்பதையும், அவர்களது பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்படும் என்பதையும் தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

07 July 2019, 13:00