தேடுதல்

Vatican News
மனிதர் நிலவில் கால்பதித்த 50 ம் ஆண்டில் அருங்காட்சியகம் மனிதர் நிலவில் கால்பதித்த 50 ம் ஆண்டில் அருங்காட்சியகம்  (AFP or licensors)

நிலவில் கால் பதித்ததை ஒரு தூண்டுதலாக நோக்க...

பலவீனமான மக்கள் தவறாக நடத்தப்படுதலையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் களைவதற்கு, பெரும் செயல்களை ஆற்றவேண்டியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

1969ம் ஆண்டு நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்ததன் 50ம் ஆண்டு நினைவு, கடந்த சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பூமியிலிருந்து 2,40,000 மைல்கள் தொலைவில் உள்ள நிலவை நோக்கி, 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச்சென்ற அப்போல்லோ 11 விண்கலம், ஜூலை 20ம் தேதி நிலவில் இறங்கியதைக் குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகப் பணிகளில் பெரும் செயல்களை ஆற்றுவதற்கு இது ஒரு தூண்டுதலைத் தருவதாக இருக்கவேண்டும் என்றார்.

பலவீனமான மக்கள் தவறாக நடத்தப்படுதலையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் களைவதற்கு பெரும் செயல்களை ஆற்றவேண்டும் என்பதற்கு, நிலவில் கால் பதித்த இந்நிகழ்வை, ஒரு தூண்டுதலாக கிறிஸ்தவர்கள் நோக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பலவீனமான மக்களை மேலும் மாண்புடன் நடத்தல், மக்களிடையே மேலும் நீதி நடைமுறை, நம் பொது இல்லமாகிய இவ்வுலகிற்கு நல்லதொரு வருங்காலம் நோக்கிய பாதையில் நடைபோடுதல் ஆகியவைகளுக்கான ஆவலை, இந்த அசாதரண நிகழ்வின் 50ம் ஆண்டு நினைவு நம்மில் தூண்டட்டும் என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

22 July 2019, 15:43