தேடுதல்

Vatican News
கர்தினால் Raimundo Damascenos Assis கர்தினால் Raimundo Damascenos Assis 

Chiquinquira கன்னி மரியாவின் நூற்றாண்டு விழா

கொலம்பியா நாட்டின் பாதுகாவலாரான Chiquinquira கன்னி மரியாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, கர்தினால் ரெய்முந்தோ தமஸீனோ அஸ்ஸிஸ் அவர்கள் பங்கேற்கிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொலம்பியா நாட்டின் பாதுகாவலாரான Chiquinquira கன்னி மரியாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில், தன் சார்பாகப் பங்கேற்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் ரெய்முந்தோ தமஸீனோ அஸ்ஸிஸ் (Raymundo Damasceno Assis) அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Chiquinquira கன்னி மரியா, கொலம்பியா நாட்டின் பாதுகாவலராக முடிசூட்டப்பட்ட நிகழ்வின் முதல் நூற்றாண்டு விழா, ஜூலை 9, வருகிற செவ்வாயன்று, சிறப்பிக்கப்படும் வேளையில், இவ்விழாவில் தன் பிரதிநிதியாகப் பங்கேற்குமாறு, பிரேசில் நாட்டின் கர்தினால் அஸ்ஸிஸ் அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் மொழியில், மடல் ஒன்றை, ஜூலை 2, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார்.

"ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!" (தி.பா. 45:10) என்று, அன்னை மரியாவை விவரிக்கும் திருப்பாடல் வரியை, தன் மடலின் துவக்கத்தில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னையை மகிமைப்படுத்தக் கூடியிருக்கும் மக்களை, தன் சார்பில் ஆசீர்வதிக்க, தன் சகோதரர் கர்தினால் அஸ்ஸிஸ் அவர்கள் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

Chiquinquira கன்னி முடிசூட்டப்பட்ட முதல் நூற்றாண்டு

Chiquinquira செபமாலை அன்னை, அல்லது Chiquinquira கன்னி என்றழைக்கப்படும் அன்னை மரியாவை, கொலம்பியா நாட்டின் பாதுகாவலராக முடிசூட்டுவதற்கு, புனிதத் திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள் 1910ம் ஆண்டு, சனவரி 9ம் தேதி அனுமதி வழங்கியிருந்தாலும், அந்நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலால், மரியன்னையின் உருவம், 1919ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி, முடிசூட்டப்பட்டது.

இந்நிகழ்வின் முதல் நூற்றாண்டு விழா, இவ்வாண்டு, ஜூலை 9, வருகிற செவ்வாயன்று Chiquinquira கன்னியின் பசிலிக்காவில் கொண்டாடப்படும் வேளையில், திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் அஸ்ஸிஸ் அவர்கள் இவ்விழாவில் பங்கேற்கிறார்.

குழந்தை இயேசுவையும், செபமாலையையும் தாங்கி நிற்கும் அன்னை மரியாவின் இருபுறமும், பதுவை நகர் புனித அந்தோனியும், திருத்தூதரான புனித அந்திரேயாவும் நிற்பதுபோல், இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், Chiquinquira பசிலிக்காவிற்குச் சென்று, கொலம்பியா நாட்டின் அமைதிக்காக சிறப்பாக வேண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

03 July 2019, 14:49