தேடுதல்

Vatican News
வத்திக்கானில் இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் வத்திக்கானில் இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின்  (ANSA)

ஆறாவது முறையாக, வத்திக்கானில், இரஷ்ய அரசுத்தலைவர்

புடின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மூன்றாம் முறையாக சந்தித்துள்ளார் என்பதும், இரஷ்ய அரசுத்தலைவராக புடின் அவர்கள் வத்திக்கானுக்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்கள், 2000 மற்றும் 2003ம் ஆண்டுகள், புடின் அவர்கள், வத்திக்கானுக்கு வருகை தந்து, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களை இருமுறை சந்தித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவி வந்த மோதல்கள், அணு ஆயுத ஒழிப்பு, புனித பூமியில் அமைதி, இரஷ்யாவில், கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே நிலவும் உறவு ஆகிய விடயங்கள் குறித்து இச்சந்திப்புக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தலைமைப்பொறுப்பில் இருந்த வேளையில், 2007ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, அவருக்கும், புடின் அவர்களுக்கும் நிகழ்ந்த சந்திப்பில், உலகெங்கும் பரவிவரும் அடிப்படைவாதப் போக்கும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதும் பேசப்பட்டன.

2013ம் ஆண்டு மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றபின், நவம்பர் 25ம் தேதி, அவரை முதல் முறையாகச் சந்தித்த புடின் அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியாவில் அமைதியை உருவாக்கும் முயற்சிகள் குறித்து பேசப்பட்டன.

2015ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், புடின் அவர்களுக்கும் இடையே 50 நிமிடங்கள் நீடித்த ஒரு சந்திப்பில், உக்ரைன், மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளில் அமைதியை உருவாக்கும் முயற்சிகள் குறித்து இருவரும் தனிப்பட்ட முறையில் பேசினர்.

ஜூலை 4, இவ்வியாழனன்று, புடின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மூன்றாம் முறையாக சந்தித்துள்ளார் என்பதும், இரஷ்ய அரசுத்தலைவராக புடின் அவர்கள் வத்திக்கானுக்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், கியூபாவின் தலைநகர் ஹவானாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்களும் 2016ம் ஆண்டு சந்தித்ததைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டு, திருப்பீடச்  செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இரஷ்யா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது, 18 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த ஒரு விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

04 July 2019, 15:23