தேடுதல்

திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

சிரியாவில் நலிந்தவர்கள் பாதுகாக்கப்பட வலியுறுத்தல்

சிரியாவில் நிலவும் மனிதாபிமானப் பேரிடரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, இயலக்கூடிய எல்லா வழிகளிலும் முயலுமாறு, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களிலிருந்து அப்பாவி குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கும் கடிதம் ஒன்றை, சிரியா அரசுத்தலைவர் Bashar Hafez al-Assad அவர்களுக்கு அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொடுத்தனுப்பியுள்ள இக்கடிதம் பற்றி வத்திக்கான் செய்திகளிடம் பகிர்ந்துகொண்ட, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், சிரியாவில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கின்ற மக்களுக்காக, திருத்தந்தை, அக்கடிதத்தில் விண்ணப்பித்துள்ளார் என்று கூறினார்.

சிரியா அரசுத்தலைவர் அல்-அசாத் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இக்கடிதம், சிரியாவில், குறிப்பாக, Idlib மாநிலத்தில் நிலவும் அவசரகால மனிதாபிமானச் சூழல் குறித்து, திருத்தந்தையும், திருப்பீடமும் அதிக கவலை கொண்டுள்ளனர் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது என்று கூறினார், கர்தினால் பரோலின்.

Idlib மாநிலத்தில் வாழ்கின்ற முப்பது இலட்சத்திற்கு அதிகமான மக்களில், 13 இலட்சம் பேர், அப்பகுதிக்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், அப்பகுதியிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டுவிட்டது இடம் என, கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டதால், இம்மக்கள் அங்கு அடைக்கலம் தேடினர் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்தார்.

அண்மையில் அப்பகுதியில் இடம்பெற்ற இரத்தம் சிந்தும் தாக்குதல்களால், அவ்விடங்களைவிட்டு மக்கள் கட்டாயமாக வெளியேறி வருகின்றனர் என்றும், சிரியாவில் போர் தொடர்ந்து இடம்பெறுவதால், துன்புறும் மக்கள், குறிப்பாக, சிறார் குறித்து திருத்தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

அப்பாவி குடிமக்களின் வாழ்வும், பள்ளிகள், மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் போன்ற நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார், கர்தினால் பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூன் 28ம் தேதி கையெழுத்திட்ட இக்கடிதம், ஜூலை 22, இத்திங்களன்று, அரசுத்தலைவர் அல்-அசாத் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.  இக்கடிதத்தை சமர்ப்பித்த ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் டர்க்சன் அவர்களுடன், அந்த அவையின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி நிக்கொலா ரிக்கார்தி அவர்களும், சிரியாவிலுள்ள திருப்பீடப் பிரதிநிதி, கர்தினால் மாரியோ செனாரி அவர்களும் உடன் இருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2019, 13:48