தேடுதல்

திருத்தந்தையுடன் கை குலுக்கும் வத்திக்கான் செய்தித்துறையின் புதிய இயக்குனர், முனைவர் மத்தேயோ ப்ரூனி திருத்தந்தையுடன் கை குலுக்கும் வத்திக்கான் செய்தித்துறையின் புதிய இயக்குனர், முனைவர் மத்தேயோ ப்ரூனி  

வத்திக்கான் ஊடகத்துறையில் புதிய நியமனங்கள்

வத்திக்கான் செய்தித்துறையின் இயக்குனராக, முனைவர் மத்தேயோ ப்ரூனி அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 18, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் செய்தித்துறையின் இயக்குனராக, முனைவர் மத்தேயோ ப்ரூனி (Matteo Bruni) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 18, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

இத்துறையின் இடைக்கால இயக்குனராக கடந்த ஆறு மாதங்கள் பணியாற்றிய முனைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி (Alessandro Gisotti) அவர்களையும், முனைவர் செர்ஜோ செந்தோபாந்தி (Sergio Centofanti) அவர்களையும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவில், துணை இயக்குனர்களாக நியமித்துள்ளார், திருத்தந்தை.

இந்த நியமனங்கள் ஜூலை 22ம் தேதி முதல் துவங்கும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறிய திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபீனி அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையின் இடைக்கால இயக்குனராக கடந்த ஆறு மாதங்கள் பணியாற்றிய ஜிசொத்தி அவர்களுக்கு சிறப்பான முறையில் நன்றி கூறினார்.

வத்திக்கான் செய்தித்துறையின் புதிய இயக்குனராகப் பொறுப்பேற்கவிருக்கும் முனைவர் மத்தேயோ ப்ரூனி அவர்கள், 1976ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி பிரித்தானியாவின் வின்செஸ்டரில் பிறந்து, உரோம் நகரின் சாப்பியென்சா பல்கலைக்கழகத்தில் ‘இன்றைய அன்னிய மொழிகள் மற்றும் இலக்கியம்’ என்ற துறையில் பட்டம் பெற்றார்.

2009ம் ஆண்டு முதல், திருப்பீடத்தின் செய்தித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவரும் ப்ரூனி அவர்கள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளை அறிந்தவர்.

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி முதல், வத்திக்கான் செய்தித் துறையின் இடைக்கால இயக்குனராக பணியாற்றிவந்த ஜிசொத்தி அவர்கள், தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்தும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபீனி அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2019, 14:54