தேடுதல்

Vatican News
மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் ஆகிய நாடுகளில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயண இலச்சனைகள் மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் ஆகிய நாடுகளில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயண இலச்சனைகள் 

மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் திருத்தூதுப் பயணம்

வருகிற செப்டம்பர் 4-10 முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும், மவுரீசியஸ் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை திருப்பீட செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வருகிற செப்டம்பர் 4ம் தேதி முதல், 10ம் தேதி முடிய, மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் ஆகிய நாடுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை, ஜூன் 28, இவ்வெள்ளியன்று செய்தியாளர்களுக்கு வெளியிட்டது, திருப்பீடம்.

செப்டம்பர் 4, புதன், உரோம் நேரம் காலை 8 மணிக்கு, மொசாம்பிக், தலைநகர் Maputo செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று உள்ளூர் நேரம் மாலை 6.30 மணிக்கு, Maputo விமானநிலையத்தில் வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.

மொசாம்பிக்கில் திருத்தந்தை

செப்டம்பர் 5ம் தேதி, Maputoவில், “Ponta Vermelha” அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவரை மரியாதை காரணமாகச் சந்தித்தல், அந்த மாளிகையில், அந்நாட்டின் அரசு, தூதரக மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுதல், பல மதங்களைச் சார்ந்த இளையோரைச் சந்தித்து உரையாற்றுதல், மாலையில், அமல அன்னை பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர்கள், வேதியர் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.   

செப்டம்பர் 6ம் தேதியன்று, ZIMPETO மருத்துவமனையைப் பார்வையிடல், Zimpeto அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுதல், அன்று பகல் 12.40 மணிக்கு மடகாஸ்கர் தலைநகர், Antananarivoவிற்குப் புறப்படல் ஆகிய திருத்தந்தையின் நிகழ்வுகள் இடம்பெறும்.

மடகாஸ்கரில் திருத்தந்தை

செப்டம்பர் 7ம் தேதியன்று, Antananarivo நகரிலுள்ள “Iavoloha” அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவரை மரியாதை காரணமாகச் சந்தித்தல், அந்த மாளிகையில், அந்நாட்டின் அரசு, தூதரக மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுதல், அந்நகரிலுள்ள கார்மேல் துறவு சபை இல்லத்தில் நண்பகல் செபத்தில் பங்கேற்று மறையுரையாற்றுதல், திருப்பீட தூதரகத்தில் மதிய உணவருந்துதல், Andohalo பேராலயத்தில் மடகாஸ்கர் ஆயர்களுக்கு உரையாற்றுதல், அருளாளர் VICTOIRE RASOAMANARIVO கல்லறையின் முன்பாகச் செபித்தல், Soamandrakizay மறைமாவட்ட முகாமில், இளையோரைச் சந்தித்து உரையாற்றுதல் ஆகிய நிகழ்வுகளை, திருத்தந்தை மடகாஸ்கர் நாட்டில் நிகழ்த்துவார். 

செப்டம்பர் 8ம் தேதியன்று, Soamandrakizay மறைமாவட்ட முகாமில், திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுதல், திருப்பீட தூதரகத்தில் மதிய உணவருந்துதல், AKAMASOA நண்பர்கள் நகரைப் பார்வையிடல், Mahatzanaவில் தொழிலாளர்களைச் சந்தித்து செப நிகழ்வில் கலந்துகொள்ளல், புனித மிக்கேல் கல்லூரியில், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும். குருத்துவ மாணவர்களைச் சந்தித்து உரையாற்றுதல் ஆகிய திருத்தந்தையின் நிகழ்வுகள் இடம்பெறும்.

மவுரீசியஸ் நாட்டில் திருத்தந்தை

செப்டம்பர் 9ம் தேதி காலை 7.30 மணிக்கு, Antananarivo நகரிலிருந்து, மவுரீசியஸ் நாட்டு தலைநகர் Port Louisக்குச் செல்வார் திருத்தந்தை. விமானத்தளத்தில் அரசு மரியாதை வரவேற்பைப் பெற்றபின், அமைதியின் விண்ணரசி நினைவிடத்தில், திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுதல், ஆயர்களுடன் மதிய உணவருந்துதல், மாலையில், PERE LAVAL திருத்தலத்திற்குச் செல்தல், அந்நாட்டு அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவரை மரியாதை காரணமாகச் சந்தித்தல், பிரதமரைச் சந்தித்தல், அந்த மாளிகையில், அந்நாட்டின் அரசு, தூதரக மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுதல் ஆகியவை திருத்தந்தையின் பயணத்திட்டத்தில் உள்ளன. 

செப்டம்பர் 9ம் தேதி இரவு 7 மணிக்கு, Port Louisலிருந்து, மீண்டும் Antananarivo செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 10ம் தேதி, அங்கிருந்து புறப்பட்டு, உரோம் நேரம் மாலை 7 மணிக்கு, உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்துசேர்வார் என திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. 

28 June 2019, 15:38