சுற்றுச்சூழல் உலக நாளை வலியுறுத்தும் அடையாளப் படம் சுற்றுச்சூழல் உலக நாளை வலியுறுத்தும் அடையாளப் படம் 

சுற்றுச்சூழல் உலக நாள் – திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"நமது மூச்சாக விளங்குவது பூமியின் காற்று, மற்றும் நமக்குப் புத்துயிர் வழங்கி, நம்மை கட்டியெழுப்புவது அதன் நீர் என்பதை இன்று நினைவுகூர்ந்து, இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 5, இப்புதனன்று சுற்றுச்சூழல் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, காற்று, நீர், மற்றும் இயற்கையின் அனைத்து கூறுகளையும் நமது உடல் கொண்டுள்ளது என்பதை நினைவுறுத்தும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"நமது உடல், பூமிக்கோளத்தின் கூறுகள் அனைத்தையும் கொண்டுள்ளது என்பதையும், நமது மூச்சாக விளங்குவது அதன் காற்று, மற்றும் நமக்குப் புத்துயிர் வழங்கி, நம்மை கட்டியெழுப்புவது அதன் நீர் என்பதையும் நாம் இன்று நினைவுகூர்ந்து, இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 5ம் தேதி, சுற்றுச்சூழல் உலக நாளை சிறப்பிக்கும் தீர்மானம், 1972ம் ஆண்டு, ஐ.நா. அவையால் பரிந்துரைக்கப்பட்டது. 1974ம் ஆண்டு, "ஒரே ஒரு பூமிக்கோளம்" (Only one Earth) என்ற மையக்கருத்துடன் சுற்றுச்சூழல் உலக நாள் முதல் முறையாக சிறப்பிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு, "ஞெகிழி மாசுப்பட்டை வெல்க" (Beat Plastic Pollution) என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் உலக நாளை, இந்தியா முன்னின்று நடத்தியது.

"காற்று மாசுபாட்டை வெல்க"  (Beat Air Pollution) என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட 46வது சுற்றுச்சூழல் உலக நாளை முன்னின்று நடத்தும் பொறுப்பு, சீனாவுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டின் மையக்கருத்தையும், 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலையும், #BeatAirPollution #LaudatoSì என்ற இரு hashtag வடிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியுடன் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2019, 14:50