புதன் மறைக்கல்வியுரையின்போது......120618 புதன் மறைக்கல்வியுரையின்போது......120618 

மறைக்கல்வியுரை : நம் ஒன்றிப்பின் வழியாக சாட்சி பகர்வோமாக

துவக்க காலத்திலிருந்தே, திருஅவையானது, ஓர் ஆன்மீகக் கூட்டுறவாகவும், இறைமக்கள் சமூகமாகவும் இருந்து வருவதைக் காண்கிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், ஐரோப்பிய நாடுகளின் இக்கோடை கால விடுமுறையையொட்டி உரோம் நகர் வரும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகம், மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க, திருத்தூதர் பணிகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரை இருந்தது.

முதலில் திருத்தூதர் பணி நூல் ஒன்றாம் பிரிவிலிருந்து,  ‘பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது : ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்....... அதன் பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே, அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்' என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையும் தன் மறைக்கல்வியுரையைத் தொடர்ந்தார். 

அன்பு சகோதரர், சகோதரிகளே! திருத்தூதர் பணிகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் நாம், இயேசுவின் உயிர்ப்போடு இணைந்ததாக திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணி துவங்கியதைக் குறித்து நோக்கினோம். தூய ஆவியார் குறித்த இயேசுவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கென இயேசுவின் சீடர்கள் அன்னை மரியாவோடு, மேல்மாடியில் செபத்தில் ஒன்றித்திருந்தனர். துவக்க காலத்திலிருந்தே, திருஅவையானது, ஓர் ஆன்மீகக் கூட்டுறவாகவும், இறைமக்கள் சமூகமாகவும் இருந்து வருவதைக் காண்கிறோம். இயேசு பன்னிரெண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்தது, திருஅவைக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் இடையே நிலவும் தொடர்ச்சியைக் காட்டுகிறது. இயேசுவின் சீடர் கூட்டத்திலிருந்து யூதாஸ் விலகிச் சென்றபின், அவரின் அந்த 12வது இடம், இன்னொருவரால் நிரப்பப்படவேண்டும் என்பதை சீடர்கள் அறிந்திருந்தனர். மத்தியாவை இறைவன் தேர்ந்தெடுத்ததை அறிந்துகொள்ள, புனித பேதுருவின் வழிகாட்டுதலில் சீடர்கள் சமூகம் செபத்தில் இணைந்திருந்தது. நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் (யோவான் 13:35), என ஏற்கனவே தன் சீடர்களிடம் கூறியுள்ளார் இயேசு. உயிர்த்த இயேசுவுக்கும் அவரின் மீட்பளிக்கும் அன்புக்கும்,  சீடர்களின் முதல் சாட்சியத் தோற்றமாக அவர்களின் வெளிப்படையான ஒன்றிப்பே இருந்தது. இறையன்பின் மீட்பளிக்கும் சக்திக்கு நம் ஒன்றிப்பின் வழியாக சாட்சி பகர்வோமாக. இந்த ஒன்றிப்பே, வீண்பெருமைகளையும், பிரிவினைகளையும் வெற்றிகண்டு, பன்மைத்தன்மைகளிலிருந்து ஒரே இறைமக்கள் கூட்டத்தை உருவாக்குகிறது.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்களை வழங்கி, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2019, 11:12