தேடுதல்

Vatican News
ஜெர்மனியில் கத்தோலிக்க மாநாடு ஜெர்மனியில் கத்தோலிக்க மாநாடு  (ANSA)

ஜெர்மன் திருஅவை ஒன்றிணைந்து நடைபயில அழைப்பு

எல்லாரையும் ஒன்றிணைத்துச் செல்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில், ஜெர்மன் திருஅவை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடல் நடத்துவதற்கு, அந்நாட்டு ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருஅவையின் புதுப்பித்தலில் மையமாக இருப்பவர் தூய ஆவியார் என்று குறிப்பிட்டு, ஜெர்மன் கத்தோலிக்கத் திருஅவை ஒன்றிணைந்து செயல்படுவதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எவரையும் ஒதுக்காமல், எல்லாரையும் ஒன்றிணைத்துச் செல்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில், ஜெர்மன் கத்தோலிக்கத் திருஅவை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடல் நடத்துவதற்கு, இவ்வாண்டு மார்ச் மாதத்தில், அந்நாட்டு ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது. அதற்கு உதவியாக, கடிதம் ஒன்றை, ஜெர்மன் தலத்திருஅவைக்கு, ஜூன் 29, இச்சனிக்கிழமையன்று அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மன் பொதுநிலை கத்தோலிக்கரின் மையக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் வல்லுனர்களைக் கொண்டு, இந்த கலந்துரையாடலை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது, ஜெர்மன் ஆயர் பேரவை.

அருள்பணியாளர்கள் மற்றும் துறவிகளால் இடம்பெற்ற பாலியல் முறைகேடுகள், ஜெர்மன் சமுதாயத்தில் வயதானவர்கள் அதிகரித்து வருவது, இறையழைத்தல்கள் குறைந்து வருவது, பாலியல் சார்ந்தவைகளில், கத்தோலிக்கப் போதனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமை, அருள்பணியாளர்கள் வாழும்நிலை உட்பட, பல்வேறு விவகாரங்கள் குறித்து, ஜெர்மன் ஆயர் பேரவை, கலந்துரையாடல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்காமல், இக்கலந்துரையாடலுக்கு உதவும் ஆன்மீக வழிகாட்டுதல்கள் பற்றி, தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மன் திருஅவையின் சிறப்புப் பண்புகளையும், அதன் பலமாக இருக்கும் இரு கூறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெர்மன் தலத்திருஅவை, அதன் தாராளப் பண்பு மற்றும் உடன் ஒத்துழைப்புக்கு உலகெங்கும் பெயர்பெற்றது என்றும், அத்தலத்திருஅவை எடுத்துவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி பற்றியும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.   

தூய ஆவியாரின் வழிகாட்டுதலில், ஒருவர் ஒருவருக்குச் செவிமடுத்து, ஒன்றிணைந்து பயணிப்போம், ஆண்டவர் நமக்கு, பேறுகள் வழியைக் காட்டுவார் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

29 June 2019, 14:46