2019.06.13 mons. Leon Kalemba nunzio apostolico del Argentina 2019.06.13 mons. Leon Kalemba nunzio apostolico del Argentina 

“டிஜிட்டல் மறைபரப்பு” கூட்டத்திற்கு காணொளிச் செய்தி

தூய ஆவியே, எம்மை ஒரே உடலாக ஆக்குபவரே, உமது அமைதியை, திருஅவையிலும், உலகிலும் பரவச் செய்தருளும் - திருத்தந்தை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருஅவையிலும், உலகிலும் தூய ஆவியார் வழங்கும் அமைதி நிலவ வேண்டுமென்று, ஜூன் 14, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

“தூய ஆவியே, எம்மை ஒரே உடலாக ஆக்குபவரே, உமது அமைதியை, திருஅவையிலும், உலகிலும் பரவச் செய்தருளும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

பேராயர் Badikebele அடக்கச்சடங்கு

மேலும், ஜூன் 12, இப்புதனன்று, உரோம் நகரில் இறையடி சேர்ந்த, அர்ஜென்டீனா திருப்பீடத் தூதர், பேராயர் Léon Kalenga Badikebele அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலியை, ஜூன் 15, இச்சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு, நூற்றுக்கும் அதிகமான திருப்பீடத் தூதர்களுடன், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றும், 98 திருப்பீடத் தூதர்களும், உலக அவைகளில் திருப்பீடத்தின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் ஐந்து தூதர்களும், வத்திக்கானில் ஜூன் 12, இப்புதனன்று தொடங்கிய கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டம், ஜூன் 15, இச்சனிக்கிழமை நிறைவுபெறும்.

“டிஜிட்டல் மறைபரப்பு நாள்கள்

இஸ்பெயின் தலைநகர் மத்ரிதில், “டிஜிட்டல் மறைபரப்பு நாள்கள் (iMision)” என்ற தலைப்பில், இடம்பெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, நல்வாழ்த்து காணொளிச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“iMision” என்ற அமைப்பு, டிஜிட்டல் உலகில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆர்வமுள்ள பல்வேறு கத்தோலிக்க நிறுவனங்கள் மற்றும் மக்களைக் கொண்டதாகும். 2012ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, நற்செய்தி அறிவிப்புப் பணியாளர்கள் அமைப்பை இணையதளத்தில் உருவாக்கி, அப்பணியில் ஒருவருக்கொருவர் உதவுதல், டிஜிட்டல் உலகில் மறைப்பணியாளர்களாக மாறுவதற்கு விருப்பமுடையவர்களுக்கு உதவுதல், பயிற்சிகளை நடத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டிருக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2019, 15:12