தேடுதல்

சிறாரின் இரயில் அமைப்பில் வந்த சிறுமி சிறாரின் இரயில் அமைப்பில் வந்த சிறுமி 

குழந்தைகளின் கனவுகாணும் திறனை களவாடக்கூடாது

ஜூன் 12ம் தேதி, குழந்தைத்தொழிலை எதிர்க்கும் உலகநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளின் கனவுகளைக் களவாடவேண்டாம் என்று, தன் டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 12, இப்புதனன்று, குழந்தைத்தொழிலை எதிர்க்கும் உலகநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளின் கனவுகளைச் சிதைக்கவேண்டாம் என்று, தன் டுவிட்டர் செய்தி வழியே, விண்ணப்பித்துள்ளார்.

"குழந்தைகளின் கனவுகாணும் திறனை வயதில் வளர்ந்த நாம் களவாடக்கூடாது. அவர்களது கனவுகளை வளர்த்து, அவற்றை பகிர்ந்துகொள்ளும் நம்பிக்கை நிறைந்த ஒரு சூழலை பேணிக்காக்க நாம் முயற்சி செய்வோமாக. பகிர்ந்துகொள்ளப்படும் கனவு, புதிய வாழ்வை நோக்கிய பாதையைத் திறந்துவிடுகிறது" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

@pontifex என்ற டுவிட்டர் முகவரியில் ஒவ்வொருநாளும் 9 மொழிகளில் தன் கருத்துக்களை பதிவு செய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘குழந்தைத் தொழில் வேண்டாம் நாள்' என்று பொருள்படும் ‘ஹாஷ்டாக்’குடன் (#NOChildLabourDay) ஜூன் 12ம் தேதிக்குரிய டுவிட்டர் செய்தியை பதிவு செய்திருந்தார்.

ஐந்து வயதுக்கும், 17 வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தைச் சேர்ந்த 15 கோடியே 20 இலட்சம் குழந்தைகளும், வளர் இளம் பருவத்தினரும், தொழில் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்குள், உலகெங்கும் குழந்தைத் தொழில் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்ற இலக்கை ஐ.நா. அவை முன்மொழிந்துள்ள போதிலும், 2008ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளது என்பதையும் யூனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது.

வறுமை ஒழிப்பு, கல்வி வசதி என்ற இரு திட்டங்களில் உலக அரசுகள் தகுதியான நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே, உலகில், குழந்தைத் தொழிலை நீக்கமுடியும் என்று, Save the Children உலக அமைப்பின் சார்பாக, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த திருவாளர் Filippo Ungaro அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2019, 14:57