தேடுதல்

Vatican News
புனித பேதுரு பசிலிக்காவில் தூய ஆவியாரை சித்தரிக்கும் கண்ணாடி புனித பேதுரு பசிலிக்காவில் தூய ஆவியாரை சித்தரிக்கும் கண்ணாடி  (AFP or licensors)

தூய ஆவியாரை மையப்படுத்தி திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"நாம் இறைவனின் குழந்தைகளாகவும், சகோதரர், மற்றும் சகோதரிகளாகவும் முழுமையாக வாழ்வதற்கு, தூய ஆவியார் நம்மை வழி நடத்துவாராக"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையப்படுத்தி தன் புதன் பொது மறைக்கல்வி உரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் மரியன்னை மீதும், திருத்தூதர்கள் மீதும் இறங்கிவந்த நிகழ்வை, ஜூன் 19, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்டதையடுத்து, அவரது டுவிட்டர் செய்தியும், தூய ஆவியாரை மையப்படுத்தி அமைந்திருந்தது.

"நாம் இறைவனின் குழந்தைகளாகவும், சகோதரர், மற்றும் சகோதரிகளாகவும் முழுமையாக வாழ்வதற்கு, தூய ஆவியார் நம்மை வழி நடத்துவாராக" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

ஜூன் 9, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்திகளை அவ்வப்போது வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தாலியின் நேபிள்ஸ் நகரில், இயேசு சபையினர் நடத்திவரும் மாஸ்ஸிமோ கல்லூரிக்கு, ஜூன் 21, வருகிற வெள்ளி, இயேசு சபையின் இளம் புனிதர்களில் ஒருவரான, புனித அலோய்சியஸ் கொன்சாகா திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருஅவை சார்ந்த பல்கலைக் கழகங்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு வெளியிட்ட Veritatis Gaudium அதாவது, உண்மையின் மகிழ்வு என்ற திருத்தூது சட்டங்களை மையப்படுத்தி, ஜூன் 20 மற்றும் 21ம் தேதி, நேபிள்ஸ் நகரில் நடைபெறும் இறையியல் கருத்தரங்கின் நிறையமர்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19 June 2019, 15:09