தேடுதல்

விசுவாசிகளை சந்திக்கும் திருத்தந்தை விசுவாசிகளை சந்திக்கும் திருத்தந்தை 

விசுவாசத்தை மையப்படுத்தி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"விசுவாசத்தின் துணைகொண்டு, இறையன்பின் தூண்டுதலின் கீழ், பிறரை வரவேற்கவும், தொடர்புகொள்ளவும், அவர்களின் கொடைகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கு உரிய முறையில் பதிலிறுக்கவும் இயலும்"

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உறுதியான உறவு முறையாக இருக்கும் விசுவாசத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"ஓர் உறவாகவும், சந்திப்பாகவும் விளங்கும் விசுவாசத்தின் துணைகொண்டு, இறையன்பின் தூண்டுதலின் கீழ், பிறரை வரவேற்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும், அவர்களின் கொடைகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கு உரிய முறையில் பதிலிறுக்கவும் இயலும்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

'பாலம் அமைப்பவர்' என்ற பொருள்படும் Pontifex என்ற இலத்தீன் சொல்லை, தன் டுவிட்டர் முகவரியாகக் கொண்டு, ஒவ்வொரு நாளும் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஜூன் 18, இச்செவ்வாய் முடிய, தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,026 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் படங்களாக, காணொளிகளாக வெளியாகி வருகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காமெரீனோ நகருக்கு, ஜூன் 16, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இம்முகவரியில் இறுதியாகப் பதிவாகியுள்ளன.

திருத்தந்தையின் செயல்பாடுகளை மையப்படுத்தி, instagram முகவரியில், அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 728 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2019, 15:28