தேடுதல்

Vatican News
இளையோருக்கும் குடும்பத்தினருக்கும் திருத்தந்தை உரை வழங்குதல் இளையோருக்கும் குடும்பத்தினருக்கும் திருத்தந்தை உரை வழங்குதல்  (Vatican Media)

இளையோருக்கும் குடும்பத்தினருக்கும் திருத்தந்தையின் உரை

எங்கு புறக்கணிப்பு உள்ளதோ, அங்கு, ஒருங்கிணைப்பை வழங்குவோம்; எங்கு ஆக்கிரமிப்பு உள்ளதோ, அங்கு அமைதியைக் கொணர்வோம்; எங்கு பொய்மை உள்ளதோ, அங்கு உண்மையைக் கொணர்வோம் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, மாலை வணக்கம். நீங்கள் வழங்கிய வரவேற்பிற்கும், இங்கு வழங்கிய சாட்சியங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

ருமேனியாவில் குழந்தைகள் தினம்

இன்று ருமேனியாவில் குழந்தைகள் தினம். எனவே, நாம் கரவொலி எழுப்பி, குழந்தைகளை வாழ்த்துவோம். அன்னை மரியா தன் அரவணைப்பில் இக்குழந்தைகளை வைத்திருக்குமாறு செபிக்கிறேன். இயேசு, தன் திருத்தூதர்கள் நடுவே குழந்தைகளை வைத்ததுபோல், நாமும், அவர்களை நம் வாழ்வின் மையத்தில் வைப்போம்.

இந்தச் சதுக்கத்தில் கூடியுள்ள குழந்தைகள், இளையோர், மணமான தம்பதியர், துறவியர், முதியோர், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்திருக்கும் அனைவரையும் காணும்போது, அங்கு இறைவனது குடும்பத்தின் முகத்தைக் காண்கிறோம். எலிசபெத்தா, இயோவான் ஆகிய இருவரும், தங்கள் பதினோரு குழந்தைகளுடன் உணரும் மகிழ்வை நாம் அனைவரும் உணர்கிறோம். குழந்தைகள் தங்களைச் சுற்றியிருப்பதுதான் பெற்றோர் அடையும் சிறந்த மகிழ்ச்சி. நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதற்கும், ஒன்றிணைந்து பயணிப்பதற்கும், தூய ஆவியார், நம்மை அழைத்துள்ளார்.

நம்மிடையே உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, இணைந்து வரும் வேளையில் உருவாகும் நம்பிக்கையில், புதிய பெந்தக்கோஸ்து அனுபவத்தைப் பெறுகிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், திருத்தூதர்களும் இந்த வழியையே பின்பற்றினர்.

இணைந்து பயணிப்பது

இணைந்து பயணிப்பது எளிதானதல்ல. அந்தக் கொடையை, நாம் வேண்டி பெறவேண்டும். இறைவாக்கினர் யோவேல் கூறுவதுபோல், இளையோரும் முதியோரும் சந்திக்கும்போது, உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். (காண்க. யோவேல் 2:28) "அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை மறக்காமல், எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவர் என்று நாங்கள் கனவு காண்கிறோம். எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வேர்களை மறக்காமல் இருப்பதற்கு நாங்கள் கனவு காண்கிறோம்" என்பது, எலிசபெத்தா, மற்றும், இயோவான் கண்ட கனவு. இதையொத்த கனவைக் குறித்து, புனித பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை வழங்கியபோது, பாட்டியும், தாயும் கொண்டிருந்த நம்பிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறார். (காண்க. 2 திமோ. 1:5-7)

அன்புகூரப்படும்போது செழித்து வளர்கிறோம்

வாங்குதல், விற்றல் ஆகியவை நடைபெறும் பங்குச் சந்தையை நமக்கு நினைவுறுத்தி, நம்பிக்கையையும் மற்றவர்களுக்கு 'விற்க' இயலாதபோது, அது, பெரிதும் பயனின்றி போகிறது என்று எதுவார்த் கூறினார். இறைவனின் அன்பு குழந்தைகள் என்ற ஆழமான உறுதியே, நம்பிக்கை என்ற கொடையாக நமக்கு வழங்கப்படுகிறது. "இளையோர், உண்மையிலேயே அன்புகூரப்படும்போது, அவர்கள் செழித்து வளர்கின்றனர்" என்று எதுவார்த் கூறினார். நாம் அனைவருமே அன்புகூரப்படும்போது செழித்து வளர்கிறோம். ஏனெனில் அன்பு, நாம் என்ற நிலையிலிருந்து வெளியே கொணர்ந்து, அடுத்தவரில் நம்மை வேரூன்றச் செய்கிறது. உங்கள் தேசிய கவிஞர் ருமேனியா நாட்டிற்காக கூறிய சொற்கள் அழகானவை "நமது குழந்தைகள், இரவில் ஒளிரும் விண்மீன்களைப்போல், உடன்பிறந்த உணர்வுடன் வாழட்டும்" (M. EMINESCU, What I Wish for You, Sweet Romania).

அயலவர் இடையே பாதைகள் இல்லாதபோது...

இணைந்து பயணிக்கும்போது, நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் இல்லத்தில் பயின்றவற்றை ஒருபோதும் மறவாதீர்கள். இந்நாட்டில் வாழ்ந்த ஒரு புனித முனிவர் கூறிய அருள்வாக்கு என் நினைவுக்கு வருகிறது. Sihăstria ஆழ்நிலை தியான துறவு இல்லத்தைச் சேர்ந்த Galaction Ilie அவர்கள், மலைப்பகுதிகளில் நடந்துசென்ற வேளையில், அங்கு ஒரு முனிவரைச் சந்தித்தார். "குருவே, எனக்குச் சொல்லுங்கள், இவ்வுலகம் எப்போது முடியும்?" என்று அவரிடம் கேட்டார். அதற்கு அந்த முனிவர், ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன், "அயலவர் இடையே பாதைகள் இல்லாதபோது, இவ்வுலகம் முடிவுக்கு வரும்" என்று கூறினார். மக்கள் தங்கள் அன்பு அனைத்தையும் இழக்கும்போது, அதுவே இவ்வுலகின் முடிவாகும், ஏனெனில், அன்பு இல்லாமல், இறைவன் இல்லாமல், ஒருவராலும் இவ்வுலகில் வாழ இயலாது!

இறைவன் நமக்கு விடும் சவால்

பல்வேறு சவால்களுக்கு நடுவே, தன் நம்பிக்கையை செயல்படுத்த முயல்வதாக, எதுவார்த் கூறினார். நம்மைச் சுற்றியுள்ள துன்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவற்றின் நடுவே நம் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது, உண்மையிலேயே பெரும் சவால்தான். துன்பங்களைக் கண்டு, நாம் நமக்குள்ளேயே தங்கிவிடுவதுதான் மிகப்பெரும் பிரச்சனை. நம்மிலிருந்து வெளியே வரும் சவாலை நமக்கு முன் வைப்பது, ஆண்டவர். நம்மிடமுள்ள திறமைகளை, வலிமையை மற்றவர்களின் பணியில் பயன்படுத்த, இறைவன் நமக்கு விடும் சவால், ஓர் அழைப்பு. நம்மிடையே உருவாக்கியுள்ள குழிகளை நிரப்பி, பாதைகளை அமைக்க, இறைவன் அழைப்பு விடுக்கிறார்.

உலக இளையோரின் தலைநகராக...

மத்திய காலத்தில், உங்கள் நாட்டிலிருந்து புறப்பட்டு, டிரான்சில்வேனியா வழியே, Santiago de Compostela திருத்தலத்தை அடைந்துள்ளனர். இன்று, உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து வாழ்கின்றனர். இவ்வாண்டு, உங்கள் நகரம், உலக இளையோரின் தலைநகராக இருக்கும் என்பதை நான் அறிந்தேன். இன்று, இங்கிருந்து, ஐரோப்பாவிற்கும், உலகிற்கும் புதிய பாதைகளை திறக்க முடியும்.

செயல்வழி வெளிப்படும் நம்பிக்கை

நமது நம்பிக்கை, வெறும் சொற்களால் மட்டும் வெளிப்படுவதில்லை, அது, நம் அன்னை, பாட்டி ஆகியோர், நம்மை அரவணைப்பதுபோன்ற செயல்கள் வழியாகவும் வெளிப்படுகிறது. சப்தமும், ஓலமும் மிகுந்துள்ள இடத்தில், நாம் செவிமடுக்க முயல்வோம்; குழப்பம் உள்ள இடத்தில், நல்லிணக்கத்தை உருவாக்குவோம்; தெளிவற்ற, நிலையற்ற இடத்தில், தெளிவைக் கொணர்வோம்; எங்கு புறக்கணிப்பு உள்ளதோ, அங்கு, ஒருங்கிணைப்பை வழங்குவோம்; எங்கு ஆக்கிரமிப்பு உள்ளதோ, அங்கு அமைதியைக் கொணர்வோம்; எங்கு பொய்மை உள்ளதோ, அங்கு உண்மையைக் கொணர்வோம்.

'இறை அன்னையின் தோட்டம்'

'இறை அன்னையின் தோட்டம்' என்று ருமேனியா நாடு அழைக்கப்படுவதன் பொருளை இங்கு நான் உணர முடிந்தது. தன் குழந்தைகள் கனவு காண்பதற்கும், தங்கள் நம்பிக்கையை பேணிக் காப்பதற்கும் தூண்டும் அன்னை மரியா, நம் அனைவரையும் பாதுகாக்கிறார். அந்த அன்னையிடம், நம் இளையோர், குடும்பங்கள் மற்றும் திருஅவையின் எதிர்காலத்தை அர்ப்பணம் செய்வோம். Mulţumesc! (நன்றி).

02 June 2019, 14:20