உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பினருடன் திருத்தந்தை உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பினருடன் திருத்தந்தை 

சிறாருக்குச் செபிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்

திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுவரும், செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை திருத்தந்தை சந்தித்தார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வரும், உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்த அமைப்பின் ஏறத்தாழ ஆறாயிரம் பிரதிநிதிகளை, ஜூன் 28, இவ்வெள்ளியன்று, புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்திற்கும், திருஅவையின் திருத்தூதுப்பணிக்கும் தங்களை அர்ப்பணித்துள்ள அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்தப் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்ட சாட்சியங்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தனிப்பட்ட வாழ்வில், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதை வலியுறுத்தி, திருஅவையில் ஒன்றிப்பை ஊக்குவித்து வருவது குறித்தும் பாராட்டினார்.

தாய்வானில் செபத்தின் திருத்தூதுப்பணி

தாய்வானில் பணியாற்றும், அருள்பணி மத்தேயு அவர்கள், சீன மொழியில் 'Click to Pray' செப முயற்சியின் நல்தாக்கம் பற்றி பகிர்ந்துகொண்டதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, சீன மக்கள், பல்வேறு இன்னல்களையும் கடந்து, செபத்தில் உண்மையாகவே ஒன்றித்திருப்பதை உணர்கின்றனர் என்பதையும், நற்செய்தி பற்றிய அறிவிலும், அதற்குச் சாட்சி பகர்வதிலும், போதுமான ஆதரவைப் பெறுகின்றனர் என்பதையும் அறியும்போது மகிழ்வாக உள்ளது என்று தெரிவித்தார்.

பிரான்சில் செபத்தின் திருத்தூதுப்பணி

175 ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்ஸ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆற்றிவரும் பணிகள் பற்றி, மரி தொமினிக் என்பவர் பகிர்ந்துகொண்டது பற்றி தன் கருத்துக்களைக் கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு மாதச் செபக்கருத்துக்கள், இயேசுவின் மறைப்பணியை, உலகில் வெளிப்படையாக ஆற்ற உதவுகின்றன என்பதைப் புரகிந்துகொள்ள முடிகின்றது என்று கூறினார்.

அர்ஜென்டீனா நாட்டு பெத்தினா அவர்கள் சான்று சொன்னது போன்று, இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருவிழாவான இன்று,  செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு உருவானதை நினைவுகூர்கின்றோம், பக்தி முயற்சிகள் மக்களின் வாழ்வை மாற்றுகின்றன, கிறிஸ்துவின் தூய்மைமிகு இதயம், நம் அனைவரையும் வரவேற்கின்றது என்று திருத்தந்தை கூறினார்.

எத்தியோப்பியா, குவாத்தமாலாவில் செபத்தின் திருத்தூதுப்பணி

எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி Selam அவர்கள், அந்நாட்டில் இயங்கும் இளையோர் திருநற்கருணை இயக்கம், இளையோர், தூய ஆவியாரின் செயல்களைத் தியானிப்பதற்கு எவ்வாறு உதவுகின்றது என்பதையும், குவாத்தமாலா நாட்டு தியெகோ அவர்கள், பேரப்பிள்ளைகளையும், தாத்தா பாட்டிகளையும் ஒன்றிணைத்து, இன்றைய உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், உலக அமைதிக்காகவும், செபிப்பதற்கு எவ்வாறு உதவுகின்றது என்பதையும், திருத்தந்தையிடம் விளக்கினர்.

சிறார்க்குச் செபிக்க கற்றுக்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நிறையச் சிறார் சிலுவை அடையாளம் வரையத் தெரியாமல் இருப்பது கவலை தருகின்றது என்று கூறினார். செபத்தில் நுழைவது, இயேசுவின் தூய்மையான இதயத்தில் நுழைவதாகும் என்றும், திருத்தந்தை கூறினார்.

டிஜிட்டல் உலகில் திருத்தூதுப்பணி

இறுதியில், போர்த்துக்கல் நாட்டு அந்தோனியோ அவர்கள், செபத்தின் திருத்தூதுப்பணி, டிஜிட்டல் உலகில், வயது முதிர்ந்தவர்களையும், இளையோரையும் எவ்வாறு ஒன்றிணைக்கின்றது என்பதற்கு, திருத்தந்தையின் முன்னிலையில் சான்று பகர்ந்தார்.

இவர்கள் ஒவ்வொருவரின் சாட்சியங்கள் குறித்த தன் எண்ணங்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன சமுதாய ஊடகங்களைப் பயன்படுத்தி, கடவுளின் இரக்கத்தையும் நன்மைத்தனத்தையும் அறிவிக்கையில், இந்த ஊடகங்களுக்கு, குறிப்பாக, இணையதளத்திற்கு அடிமையாகாமல் இருப்பதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

திருஅவையின் திருத்தூதுப்பணியின் மையம் செபம் என்பதை, இந்த உலகளாவிய  செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்த அமைப்பினர், இந்தப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகிழ்வுடன் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இயேசு சபையினருக்கு நன்றி

கடவுள் தங்களில் செயல்படுகிறார் என்பதை உணர, இந்த அமைப்பினரின் பணி உதவுகின்றது என்றுரைத்து, அவர்களை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பை நடத்தும் இயேசு சபையினருக்கும், குறிப்பாக, இயேசு சபை அருள்பணி Fornos அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இயேசு சபையினர் அறிவாளிகள் என்ற எண்ணம் உண்டு, ஆயினும், இத்தகைய மாபெரும் செப அமைப்பையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர், இயேசு சபையினர் செபிக்கும் மனிதர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இறுதியில் அனைவரோடும் இணைந்து, தனது ஜூலை மாதச் செபக்கருத்துக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பு

1844ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் இயேசு சபை அருள்பணியாளர் Francis Xavier Gautrelet அவர்களால் உருவாக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பு, இவ்வாண்டு தன் 175வது ஆண்டை நிறைவு செய்கின்றது. இதையடுத்து, உலகின் பல பகுதிகளிலிருந்து 6000த்திற்கும் அதிகமானோர், ஜூன் 28 இவ்வெள்ளி, ஜூன் 29 இச்சனி ஆகிய இரு நாள்கள் உரோம் நகரில், இதனைக் கொண்டாடுகின்றனர்.

செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பில், இன்று உலகெங்கும் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர். செபத்தின் திருத்தூதுப் பணி அமைப்பு, அண்மைய ஆண்டுகளில், 'The Pope Video' மற்றும், 'Click to Pray' முயற்சிகளின் வழியே இளையோரை இவற்றில் ஈடுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2019, 15:50